ச.பா.நிர்மானுசன்

February 12, 2018

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

Filed under: Uncategorized — Nirmanusan @ 1:48 pm

சிறீலங்காவின் சுதந்திர தினத்தை 118 நாடுகளில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. அதில், பிரித்தானிய போன்ற நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.

அதேவேளை, நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்கள் கடந்த ஆண்டுகளைப் போல, இம்முறையும் சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சனநாயக விழுமியங்களுக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களோடு, சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் அமைச்சர் ஆலோசகராக (பாதுகாப்பு) பணிபுரியும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ ஆரம்பத்தில் சிவில் உடையில் நின்று முரண்பட்டார்.

பின்னர் சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்குள் சென்ற பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சிறீலங்கா இராணுவ உடையில் வெளியே வந்து, எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு தொண்டையை வெட்டுவேன் என சைகை மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.

Bri PF

இவருடைய செய்கைகள் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களால் கானொலி மூலம் பதிவு செய்யப்பட்டது. தொண்டையை வெட்டுவேன் என சைகை மூலம் கொலை அச்சுறுத்தல விடுத்த கானொலி சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவ, சிறீலங்கா அரசாங்கத்துக்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் நெருக்கடிகள் தோற்றம் பெற்றது.

ஒருபுறம் இலங்கையில் சனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பின்னணி தொடர்பாக விரைந்து வெளியிட்ட ஆவணம், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ ஒரு போர்க்குற்றவாளி என வெளிப்படுத்தியது. மறுபுறம், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் செயற்பாட்டை வன்மையாக கண்டித்தன.

இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பிரித்தானிய சட்டத்தை மீறிவிட்டார் என்ற கருத்துக்களும் மேலெளுந்தன. ஆயினும், தண்டனைகளிலிருந்து விதிவிலக்களிக்கும் அவருக்கான இராசதந்திர தகுதிநிலை அவரை தண்டனைகளிலிருந்து பாதுகாத்தது. சமதருணத்தில், அவரது இராசதந்திர தகுதிநிலையை நீக்கி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வேரூன்றியுள்ளது.

சிறீலங்காவுக்கான அழுத்தங்களும் அவமானமும் தீவிரமடைந்ததால், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் வகித்த பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கான அறிவுறுத்தல், இலண்டனில் உள்ள சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டது.

ஆயினும், சிறீலங்கா சனாதிபதியின் தலையீட்டையடுத்து, 24 மணித்தியாலத்துக்குள்ளேயே பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ அவர் வகித்த பதவியில் மீளவும் நியமிக்கப்பட்டார். இதேவேளை, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விடுத்த கொலை அச்சுறுத்தல் தொடர்பான ஆதாரத்தை நிராகரித்த சிறீலங்கா இராணுவம், அவர் இராணுவத்துக்கு ஆற்றிய சேவைகளுக்காகவும் போரியல் சாதனைகளுக்காகவும் தண்டிக்கப்படமாட்டார் என்ற தொனியில் தமது கருத்தினை வெளிப்படுத்தியது.

முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வதையோ இல்லை இனஅழிப்புக்குள்ளான தமிழர்களுக்கு நீதி வழங்குவதையோ சிங்கள தேசம் இயதசுத்தியுடன் செய்யப் போவதில்லையென்பதை, இலண்டன் நகரில் நூற்றுக்கணக்கானவர்கள் பார்த்திருக்க, கனொலிகள் பதிவு செய்ய விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலை மறுதலித்ததுடன் ஊடாக சிங்கள தேசம் மீண்டும் ஒரு தடவை உறுதியாக பதிவுசெய்துள்ளது.

சிறீலங்கா சனாதிபதியின் செயற்பாடும், சிறீலங்கா இராணுவத்தின் கருத்துக்களும் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த காலங்களிலும்,  சிறீலங்காப் படைகள் மேற்கொண்ட இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும் கண்களும் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள், இசைப்பிரியாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் பாலச்சந்திரன் படுகொலை போன்ற முக்கியமான ஆதாரங்கள் வெளிவந்த போது, அவற்றை சிறீலங்கா ஆட்சிபீடம் நிராகரித்தது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பின்னணி

நான்காம் கட்ட ஈழப்போர் உக்கிரமாக இடம்பெற்ற 2008 – 2009 காலப்பகுதியில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ முல்லைத்தீவு மாவட்ட இராணுவ முன்னரங்கில் பணியாற்றினார். ஏப்ரல் 2008 ல் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படைப்பிரிவின் அங்கமான 11 ஆவது கெமுனு காவற் படையணியில் மணலாறு பிரதேசத்தில் போரிட்டுள்ளார். 20 ஒகஸ்ட் 2009 இவருக்கு பதவியுயர்வு கிடைத்தது. 1 ஒகஸ்ட் 2009 – 25 பெப்ரவரி 2010 மற்றும் 23 ஒக்டோபர் 2014 – 21 சனவரி 2016 வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள 651 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார். 2010-2013 வரை கெமுனு காவற் படைத்தளத்தின் கட்டளையதிகாரியாக பணியாற்றினார். ஒக்டோபர் 2016 இந்தியாவுடனான கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கையை நெறிப்படுத்தினார். 2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியாக இணைந்தார்.

போர்க்குற்றம்

இவர் முக்கிய பங்காற்றிய 59 ஆவது படையணி முல்லைத்தீவை நோக்கி நகரும் போது, முல்லைத்தீவு மருத்துவமனை மீது பலதடவைகள் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. இதனை இலங்கைத் தீவு தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் பணியக அறிகையும் உறுதிசெய்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30 / 1 ன் பிரகாரம், பின்புல பரிசோதனைகளுக்கு பின்னரே சிறீலங்காவின் பொது அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படையினர் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக இராசதந்திர பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். ஆயினும், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது போல இதனையும் சிறீலங்கா அரசாங்கம் செய்யவில்லை.

மாலியில் சமாதானப் படைகளாக சென்ற இராணுவத்தினர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பின்புல பரிசோதனைகளுக்குப் பின்னரே குறித்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர். 2008 – 2009 வரையான காலப்பகுதியில் வட போர்முனை முன்னரங்கில் பணியாற்றிய சிறீலங்காப் படையினர் மாலிக்கான சமாதானப் படைகளில் உள்வாங்கப்படவில்லை. அதனை கருத்தில் கொண்டாவது பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை இராசதந்திர பதவிக்கு சிறீலங்கா அரசாங்கம் நியமித்திருக்கக் கூடாது.

போர்க்குற்றவாளிகளை போரின் கதாநாயகர்களாக கொண்டாடும் சிறீலங்காவும், எந்த கட்டத்திலும் போரில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்பட அனுமதிக்கப் போவதில்லையென்ற என்ற சிங்கள தேச ஆட்சி பீட மனோபாவமும் மாறவுமில்லை மாறப்போவதுமில்லை என்பதன் எடுத்துக்காட்டே பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பிரித்தானியாவுக்கான சிறீலங்கா உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு நியமித்தமை வெளிப்படுத்துகிறது.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பில் ஈடுபட்ட சிறீலங்காவின் ஆயுதப்படையின் கட்டளை அதிகாரிகளை, சிறீலங்காவின் இராசதந்திர சேவைக்கு நியமிக்கும் வழக்கம் மகிந்த இராஜபக்ச காலத்தில் தொடங்கி தற்போதும் தொடர்கிறது. தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் இராசதந்திர தகுதிநிலை சிறீலங்காவின் இராணுவ கட்டளை அதிகரிகளை காப்பாற்றும் என்ற உபாயமாக இந்த நகர்வு இருக்கலாம். ஆயினும், இதனை முறியடிக்கும் நகர்வுகளை நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர் அல்லாத முற்போக்கு சக்திகளும், புலம்பெயர் தேசங்களில் செயற்படும் தமிழ் செயற்பாட்டாளர்களும் முன்னெடுத்து வருகின்றனர்.

இலக்கு வைக்கப்படும் போர்க்குற்றவாளிகள்

இறுதிப் போரின் போது 59 ஆவது படையணியின் பொறுப்பதிகாரியான சார்லி காலகே, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரியாக 2010ல் பிரித்தானியாவுக்கு வந்தார். இவரை கைதுசெய்வதற்கான நகர்வுகளில் புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்ட போது, பிரித்தானியாவை விட்டு அவசரமாக வெளியேறினார்.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் 57 படைப்பிரிவின் பொறுப்பதிகாரியாக விளங்கியவர். இவர் ஜேர்மனி, சுவிற்சிலாந்து மற்றும் வத்திக்கானுக்கான துணைத் தூதுவராக 2010 ல் நியமிக்கப்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றச்சாட்டின் அடிப்படையில், 2011ல் சிறீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதன் பிற்பாடு மேற்குலக நாடுகளுக்கு இவர் பயணம் செய்ய முற்பட்ட போது இவருக்கான நுழைவு அனுமதி மறுக்கப்பட்டது.

போரின் இறுதிக்கட்டங்களில் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நாவுக்கான சிறீலங்காவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பிற்பாடு, இவர் மீதான போர்க் குற்றசாட்டுகள் காரணமாக, ஐ.நாவின் சமாதானப் படைகளுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்கும் குழுவுக்கு பொருத்தமற்றவர் என்ற அடிப்படையில் 2012 பெப்ரவரியில் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2012 மார்ச்சில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் நிகழ்வுக்கு, நியுயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நாவுக்கான பிரித்தானிய தூதரகம் சவேந்திர சில்வாவை அழைப்பதில்லையென்ற முடிவையெடுத்தது.

இலத்தின் அமெரிக்காவின் முக்கியமான நாடுகளுக்கு தூதுவராக நியமிக்கப்பட்ட சிறீலங்காவின் முன்னால் இராணுவத் தளபதியான லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவுக்கு எதிராக, 2017 ஒகஸ்ட்டில் பிரேசில், பெரு, சிலி மற்றும் கொலம்பியவில் அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் குற்றவியல் முறைப்பாட்டை பதிவுசெய்தது. போர்க்குற்றச்சாட்டுகள் அடிப்படையிலான இந்த முறைப்பாடு தனக்கு ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகளை முன்னுணர்ந்த ஜகத் ஜயசூரியா பிரேசிலை விட்டுத் தப்பியோடினார்.

2009 ற்குப் பிறது சிறீலங்கா இராணுவ உயர் மட்ட கட்டளைத் தளபதிகளுக்கு சர்வதேச ரீதியிலும் இராசதந்திர ரீதியாகவும் ஏற்பட்ட மற்றுமொரு பாரிய பின்னடைவாக தற்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்குக்கு எதிரான நகர்வு வியாபித்துள்ளது. சிறீலங்கா 118 நாடுகளில் மேற்கொண்ட சுதந்திர தினம் பெற்ற கவனத்தை விட, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒரு இடத்தில் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை அதிகமான கவனத்தை ஈர்ந்துள்ளது. தமிழர்கள் அல்லாத முற்போக்கு சக்திகளும் தமிழர்களும் இணைந்து மேற்கொண்ட இந்த வெற்றிகர நகர்வானது, தமிழர் தேசத்துக்கு எதிராக முள்ளிவாய்க்கால் இனஅழிப்போடு திணிக்கப்பட்டுள்ள தோல்விமனப்பாங்கை மெதுமெதுவாக தகர்த்து வெற்றி மனப்பாங்கை நோக்கி நகர்த்துகிறது.

தமிழர்களின் நீதிக்கான போராட்டம் ஆக்கபூர்வமான திட்டமிடலுடன், இலக்கு சார் ஒற்றுமையுடன் புலம்பெயர் தளத்தில் முன்னெடுக்கப்படுமாக இருந்தால், சிறீலங்கா இராணுவத்தை சார்ந்த பல்வேறு போர்க்குற்றவாளிகளையும் நெருக்கடிக்குள் தள்ளுவதோடு நீதிக்கான போராட்டத்தில் முன்னோக்கி நகர முடியும்.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் அடுத்த ஆண்டு இடம்பெறும் முன்னர், உணர்வோடு மட்டுமின்றி ஆக்கபூர்வமான செயற்திட்டத்தோடு தமிழர்கள் இலக்கினால் ஒருங்கிணைவதே முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு செய்யும் அர்த்தம் பொதிந்த வலுவான நினைவேந்தலாகும்.

Advertisements

December 16, 2017

தமிழ் சமூகத்திற்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது

Filed under: Uncategorized — Nirmanusan @ 3:01 pm

பதினைந்து வருடங்களுக்கு முந்திய ஒரு நவம்பர் மாதம். புதிய பணி, பாரிய பொறுப்புடன் யாழ் மாவட்ட இணைப்பாளராக யாழ் மண்ணில் கால்பதிக்கிறேன்.

முதற்கட்ட சந்திப்புகள் பல்வேறு கட்டமைப்புக்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் இடம்பெறுகிறது. அத்தகைய சந்திப்புகள் ஒன்றில்தான் மனிதநேயமும் சமூக அக்கறையும் கொண்ட பரமநாதன் ஐயா என்ற ஆளுமையை சந்திக்கிறேன். அன்பும் மதிப்பும் கொண்டு அவரை ஐயா எனவும், அவரது துணைவியாரை அம்மா என்றும் நான் அழைப்பதுண்டு. எமது முதல் சந்திப்பே எமது நட்புக்கும் பல்வேறு தொடர் சந்திப்புகளுக்கும் வித்திடுகிறது.

Uncle

தயாரிப்பு, திட்டமிடல், தூரநோக்குப் பார்வை, விளக்கமளிக்கும் முறை, நல் ஆலோசனைகள் இவற்றிற்கு அடித்தளமான கடின உழைப்பு போன்ற பணி நெறிகள் ஒருபுறம். அடக்கம், எளிமை, நட்புரிமை மற்றும் காணும் போதெல்லாம் உற்சாகமூட்டும் புன்னகை மறுபுறம் என பவ்வேறு பண்புகளையும் தன்னகத்தே கொண்ட அற்புத மனிதர் பரமநாதன் ஐயா.

கடிகார முட்கள் நள்ளிரவை தொடும்போதும், அம்மாவின் கரிசனையையும் தாண்டி ஐயாவின் தட்டச்சு இயந்திரம் அடுத்த நாள் இடம்பெறும் கூட்டத்திற்காக சலிப்பின்றி இயங்கும்.

அவருடைய உடல்நிலை காரணமாக, வீட்டில் அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டியவரோ, பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக பல்வேறு கூட்டங்களிலும் ஒலித்துக்கொண்டிப்பார்.

சிறந்த நிர்வாகம் வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காக யாருடனும் அச்சமின்றிப் உரையாடுபவர். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். இதனால் யாழ் மாவட்ட இராணுவத் தளபதிகளுடனும் முரண்பாடு தோன்றியது.

சிவில் சமூக பிரதிநிதியாக, யாழ் மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் அமைய செயற்பாட்டாளராக, தமிழ் மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பாளராக மக்கள் நலனை முதன்மைப்படுத்திய பணியில் பரமநாதன் ஐயா ஈடுபட்டிருந்தார்.

சமூக நலனுக்காக, மனிதாபிமானப் பணிகளுக்காக, மனித உரிமைகளுக்காக இளைய சமுதாயம் முன்னுக்கு வரவேண்டும் என விரும்பி உற்சாகமூட்டுபவர்.

குறுகிய கால அவகாசத்துடன் சுமார் 1200 குறுங்கால தேர்தல் கண்காணிப்பாளர்களை இனம்கண்டு, பயிற்சியளித்து, நியமனம் செய்ய வேண்டும். பதினொரு பிரதேச காரியாலங்களை உருவாக்கி, பதினொரு நடமாடும் தேர்தல் கண்காணிப்பு வாகனங்களை ஒழுங்கு செய்ய வேண்டும். இருபத்திரண்டு சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வழிபடுத்த வேண்டும் என பாரிய பொறுப்புகள் ஒருபுறம். சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் எனக்கெதிரான விசமப் பிரச்சாரம், கொழும்பைத் தளமாகக் கொண்ட சில ஆங்கில, சிங்கள ஊடகங்களின் எனக்கெதிரான தவறான அறிக்கையிடல், துணை இராணுவக்குழுவின் நேரடியான அச்சுறுத்தல் என பிரச்சினைகள் மறுபுறம்.

இத்தனை சவால்களுக்கும் முகம்கொடுத்தபடி இலக்கை அடையவேண்டும் என்ற இலட்சியம் என்னிடம் இருந்தது. அதனை அடைவதற்கான ஆலோசனையின் அங்கமாக பிரெஞ்சுப் பழமொழியான “Rome wasn’t built in a day” மற்றும் “Well begun is half done” என்ற கிரேக்க அறிஞ்ஞரான அரிஸ்ரொற்லின் பழமொழியையும் என் மனதில் விதைத்தார் பரமநாதன் ஐயா. நெருக்கடியான காலகட்டங்களிலெல்லாம் இந்த சிந்தனைத்துளிகளும், அவற்றை என மனதில் விதைத்த பரமநாதன் ஐயாவும் எனது மனதில் தோன்றி மறைந்து மீண்டும் தோன்றுவது வழமை.

ஆயினும், போரின் தாக்கம் எமது தொடர்பாடலிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனது தொடர்புகள் யாருக்கும் பிரச்சினைகளை உண்டுபண்ணக்கூடாது என்ற காரணத்திற்காக தொடர்பை துண்டிக்க வேண்டியவர்களில் பரமநாதன் ஐயாவையும் உட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இருப்பினும், பரமநாதன் ஐயா அடிக்கடி என் நினைவில் தோன்றுவார். தற்போது, பரமநாதன் ஐயா மறைந்துவிட்டார் என்ற செய்தி அறியமுடிந்தது. இனி அவர் நினைவில் மட்டுமே தோன்றுவார் என எண்ணும் போது நெஞ்சம் கனக்கிறது. ஆயினும், அவர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இதயங்களில் நிலையாக வாழ்வார் என்ற நம்பிக்கை ஆறுதல் அளிக்கிறது.

December 1, 2017

தண்டனைகளிலிருந்து தப்பமுடியாத போர்க்குற்றவாளிகள் !

Filed under: Uncategorized — Nirmanusan @ 3:16 pm

ஒரு புறம் நீண்ட காத்திருப்பு, சலிப்பு, வலிகள் நிறைந்த வாழ்க்கை நகர்ந்தது. மறுபுறம், நீதிக்கும் அதன் அங்கமான பொறுப்புக்கூறலுக்குமான போராட்டம் சோர்வற்று தொடர்ந்தது. காலமும் உலக அரசியல் போக்குகளும் மாற களமும் மாறியது. எது நடக்காதென்று பலர் எண்ணினார்களோ அது நடந்தது. வெற்றியாளர்கள் என்ற மமதையுடன் இருந்தவர்கள் மண்டியிடத் தொடங்கினார். ஒரு வரலாறு முடிந்ததாக கூறப்பட்ட போது ஒரு புதிய வரலாறு பிறப்பெடுத்தது.

புரிய மறுத்தனர், புதைக்க துடித்தனர், அழிக்க முயன்றனர் என சில தரப்புகள். வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் போராட வேண்டும் என்ற இலட்சியத்தோடு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டது ஒரு தரப்பு. அவமானங்களை அலட்சியப்படுத்தி, புறக்கணிப்புகளை புறந்தள்ளி, வசைபாடல்களுக்கு அசையாமல் அணி சிறியதாயினும் இலக்கில் உறுதியாய் நம்பிக்கையோடு நகர்தது அந்த ஒரு தரப்பு. அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. அவர்களுடைய செயற்பாட்டின் இறுதி எதிர்கொள்ளலாக வெற்றியே அமைந்தது.

இவை உலக அரங்கிலும், உள்ளக சூழலிலும் நடந்தவை. வெளிவந்தவற்றுக்கு நிகராக வெளிவராதவை பல. மிக மிக அண்மையில் வெறிவந்த மூன்று சம்பவங்களின் சுருக்கம் கீழே. விளக்கமாக பிறிதொரு நாளில்.

நிகழ்வு 1: 1976 – 1983 வரையான காலப்பகுதியில் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தமை நிரூபிக்கப்பட்டமையால் ஆர்ஜென்ரீனாவின் முன்னால் கடற்படை அதிகாரிகள் இருவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வு 2: பொஸ்னியாவின் குரோசிய இனத்தை சார்ந்த முன்னால் இராணுவத் தளபதி சுலோபொடன் பிரள்யக் 1993 நவம்பர் மாதம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டமையால், 20 ஆண்டுகால சிறைத்தண்டனை தீர்ப்பு நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வழங்கப்பட்டது. அத்தருணத்தில், அதனை எதிர்த்த சுலோபொடன் பிரள்யக், தீர்ப்பாயத்திற்குள்ளேயே நீதிபதிகளுக்கு முன்னால் நஞ்சருந்தினார். இறுதியில் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

நிகழ்வு 3: பொஸ்னியாவின் சேர்பிய இனத்தை சார்ந்த முன்னால் இராணுவத் தளபதியான ரட்கோ மிளடிக், 1995 யூலையில் செறபிறெனிட்சாவில் (Srebrenica massacre ) மேற்கொண்ட படுகொலைகள் போர்க்குற்றம், மானுட குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் இனஅழிப்பென நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் நீரூபிக்கப்பட்டு ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பன்னெடும் காலங்களுக்கு முன்னர் இந்த குற்றங்கள் இழைக்கப்பட்ட போதும், அவற்றிற்கான தீர்ப்பு கடந்த நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்திலேயே வழங்கப்பட்டுள்ளது.

ஆறாத வலியோடும் வடுவோடும் பல ஆண்டு காலம் போராடினாலும் இறுதியில் நீதி வென்றிருக்கிறது. தண்டனைகளிலிருந்து போர்க்குற்றவாளிகளால் தப்பமுடியவில்லை.

ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டமும், சோர்வற்று தன்னம்பிக்கையோடு தடைகளைத் தாண்டி தொடர்ச்சியாக நகருமானால், தமிழின அழிப்பாளர்களும் போர்க்குற்றவாளிகளும் தண்டனைகளிலிருந்து தப்ப முடியாது.

November 21, 2017

எஸ்.எம்.ஜி இனி எம்முடன்…

Filed under: Uncategorized — Nirmanusan @ 1:55 pm

தடம் எடுத்து வைத்த போது
தோள்தட்டிக் கொடுத்தவர்
விடைகொடுத்திடும் நேரமதில்
மௌனத்தை கலைத்தேயாக வேண்டிய அழுத்தத்தில்
கருத்தரித்த உணர்வின் வரிகளிவை…

SMG

எஸ்.எம்.ஜி – கோபு – பாலரட்ணம் போன்ற பல புனை பெயர்களைக் கொண்ட எஸ்.எம். கோபாலரத்தினம் அவர்களுக்கு தமிழ் ஊடக உலகில் அறிமுகம் தேவையில்லை. அத்தகைய ஒரு மாபெரும் ஆளுமை தொடர்பாக எங்கே ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்று ஒரு புறமும், எதனை எழுதுவது, எதனை தவிர்ப்பது என்று மறுபுறமும் மனதுக்குள் ஒரு போராட்டம். அதீத நினைவாற்றல் இல்லாவிட்டாலும் முடிந்தரை முயல்கிறேன் நினைவுகளை கோர்வையாக்க.

சரிநிகர் ஒரு பத்திரிகையாக விளங்கி சஞ்சிகையாக மாறுவதற்கிடையில் ‘நிகரி’ 2002 சனவரியில் ‘ராவய’ வளாகத்தில் தோற்றம் பெறுகிறது. அந்த தளத்தில் , அந்த தருணத்தில்தான் தமிழ் ஊடகப் பரப்பில் எனது அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன்.

எஸ்.எம்.ஜி 50 ஆவது ஆண்டில் தடம் பதித்த காலப்பகுதியில், தமிழ் ஊடகப் பரப்பில் நான் எனது முதல் தடத்தை எடுத்து வைத்தேன். அந்த தருணத்தில்தான் சிவா அண்ணா எஸ்.எம்.ஜியை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஆளுமையையும், ஆரம்ப நிலையிலிருந்த என்னையும் உள்வாங்கி ‘நிகரியை’ ஆரம்பிப்பதற்கான ஒரு குழுமத்தை உருவாக்கினார் சிவா அண்ணா. இந்த குழுமத்தில், ரேவதி அக்கா, ஒரு காலப்பகுதியில் யசோ ஆகியோருடன் வியாழக்கிழமைகளில் சிவராம் அண்ணா, விக்கி அண்ணா, பல தருணங்களில் சரவணன் அண்ணாவும் ஒன்றிணைவார்கள்.

நான் கட்டுரைகளை எழுதும் போது அவற்றை வாசித்து, செழுமைப்படுத்தி எனக்கு அறிவுரைகளை வழங்கி வழிப்படுத்தும் எஸ்.எம்.ஜி, சுவாரசியமான கதைகளையம் அனுபவங்களையும் பகிர்வார். பன்முக ஆளுமையை கொண்டிருந்த எஸ்.எம்.ஜி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆணவத்தோடு செயற்பட்டதை நான் பார்த்ததில்லை. எமது பணியகத்தின் மேல் மாடியில் விக்டர் ஐவனையும், கீழே எஸ்.எம்.ஜியையும் பார்க்கும் போது இரு ஆளுமைகளின் வெவ்வேறு பரிமாணங்களை அறியமுடிந்தது.

எஸ்.எம்.ஜிக்கும் எனக்கும் குரு – சிஷ்யனாக இருந்திருக்க வேண்டிய உறவு எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அவரது பண்பால் ஒரு பேரனுக்கும் பூட்டனுக்குமுள்ள ஒரு உறவு போல் பரிணமித்தது. இதுவே, கோபு ஐயா என அழைக்கப்பட்டிருக்க வேண்டியவரை எந்தவித தயக்கமுமின்றி எஸ்.எம்.ஜி என உரிமையோடும் வாஞ்சையோடும் அழைக்கத் தூண்டியது.

ஒரு கட்டத்தில் எஸ்.எம்.ஜி மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் படுகொலை தொடர்பாகவும், நான் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை தொடர்பாகவும் சிவா அண்ணாவின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுதினோம். கட்டுரை எழுதி முடிந்ததும், எனது கட்டுரையை வாங்கி வாசித்த எஸ்.எம்.ஜி, நான் ஈ.பி.டி.பி என எழுதிய இடங்களில் ஆயுதம் தாங்கிய தமிழ்க் கட்சி என மாற்றம் செய்தார். அவரது மாற்றத்தோடு உடன்பாடு இல்லாதபோதும் இறுதியில் எதிர்ப்புக்காட்டவில்லை. ஆயினும், அவரது முன்னெச்சரிக்கை பின்னர் பல தடவைகளில் எனக்கு உதவியது.

2002 ஏப்ரல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ஊடகவியலாளர் மாநாட்டுக்கு சென்றிருந்த போது, வன்னியில் எதிர்பாராத ஒரு சந்திப்பு நிகழ்கிறது. அந்த சந்திப்பின் போது நிமலராஜன் அவர்களின் படுகொலை தொடர்பாக நான் எழுதிய கட்டுரையில் ஈ.பி.டி.பி என குறிப்பிடாமல் ஆயுதம் தாங்கிய தமிழ்க் கட்சி எனக் குறிப்பிட்டதற்கான காரணத்தை அறியவிரும்பினார் என்னோடு உரையாடிய பொறுப்பாளர்களில் ஒருவர். அது எஸ்.எம்.ஜியின் ஆலோசனைக்கு அமைவாக மாற்றப்பட்டது என தெரியப்படுத்திய போது, குறித்த பொறுப்பாளர் அதற்குப் பின் அது தொடர்பான கேள்வி எதனையும் கேட்காமல் மௌனமானர். 2004 யூன் மாதம் எஸ்.எம்.ஜி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரினால் கௌரவிக்கப்பட்டார். இந்த மதிப்பளிப்பு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இளம் ஊடகவியலாளர்கள் தமது திறன்களை வளர்த்துக்கொள்வதற்காக அவர்களை வழிப்படுத்துவதற்கான எஸ்.எம்.ஜியின் தேவையும் எடுத்துக்கூறப்பட்டது. குறித்த பொறுப்பாளரின் மௌனம் இந்த அறிக்கையை வாசித்த போது சற்று புரிதலை ஏற்படுத்தியது.

எதிர்பாராதவிதமாக, “நிகரி” குடும்பத்தின் கூடு கலைந்த போது எஸ்.எம்.ஜிஉம் நானும் திசைக்கொருவரானோம். எதிர்பாராதவிதமான சந்திப்பு. பின்னர் பிரிவு. மீண்டும் எதிர்பாராதவிதமான சந்திப்பு என உறவு தொடர்ந்தது.

ஒரு நாள், “நமது ஈழநாடு” பத்திரிகைப் பணியகத்தில் ராதேயன் அண்ணாவுடன் உரையாடி விட்டு வெளியேறும் போது, எதிர்ப்பட்ட கண்ணன் சொன்னார், உங்களை தெரிந்த ஒருவர் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்று. என்ன ஆச்சரியம். முதுமை அவரைத் தொட்டபோதும், பார்வைக்கு அதே கம்பீரத்துடனும், புன்சிரிப்போடும் எங்கள் எஸ்.எம்.ஜி. மட்டற்ற மகிழ்சி எனக்கு. “நமது ஈழநாடு” பணியகத்துக்கு சென்று வருவதற்கே சிந்திக்க வேண்டி இருந்த தருணத்தில், அந்த வயதிலும் அச்சமற்றவராய் எஸ்.எம்.ஜி “நமது ஈழநாட்டில்” பணியாற்றினார். அவரது படைப்புகள் தொடர்பாக உரையாடினோம். புதிய நூலுருவாக்க பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு, சில பழைய தமிழ் அரசியல்வாதிகளின் ஒளிப்படங்கள் தேவைப்பட்டது (வரதன் அண்ணா போன்ற அதீத நினைவாற்றல் இருந்திருக்குமாயின் குறித்த அரசியல்வாதிகளின் பெயர் இன்றும் நினைவில் நின்றிருக்கும்). அதனை நிவர்த்தி செய்ய என்னால் இயன்றவரை முயல்கிறேன் என்றேன். போர் நிறுத்த காலப்பகுதி என்றபடியால் ஏரிக்கரையில் தினகரனுக்கும் சென்று சில ஒளிப்படங்களை அவர்களின் சுவடிகள் காப்பகத்தில் கட்டணம் செலுத்தி பெறமுடிந்தது. அவர் தேடிய ஒளிபடங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொடுக்க முடியாமல் போனாலும் கணிசமாக ஒளிப்படங்களை பெற்றுக்கொடுக்க முடிந்தது.

எனது நினைவுக்கெட்டிய வரையில் “நமது ஈழநாடு” பணியகத்தில் வைத்தே எங்களுக்கிடையில் சில தொடர் சந்திப்புகள் இடம்பெற்றது. அவருடைய நூல்களையும் அங்கே வைத்தே அவரது கையொப்பம் இட்டு எனக்கு வழங்கினார். அங்கேதான் இறுதிச் சந்திப்பும் இடம்பெற்றதாக நினைவு.

பின்னர், ‘யாரென்று தெரிகிறதா’ என்ற தலைப்போடு, எஸ்.எம்.ஜியோடு நண்பர் ஜெரா நிற்கின்ற ஒளிப்படத்தை பார்த்த போது, எனது அன்பை எஸ்.எம்.ஜிக்கு தெரியப்படுத்துமாறு ஜெராவை கேட்டுக்கொண்டேன்.

சந்திப்பு – பிரிவு – இணைவு – பிரிவு எனத் தொடர்ந்த எங்கள் உறவு இறுதியில் நிரந்தரப் பிரிவோடு ஈடுசெய்யமுடியாத மற்றுமொரு பேரிழப்பாக முற்றுப் பெறுகிறது. ஆயினும், மரணத்துக்குள்ளும் வாழ்ந்த எஸ்.எம்.ஜி மரணத்திற்குப் பின்னும் இனி எம்மோடு ஆத்மார்த்தமாக வாழ்வார் என்ற நம்பிக்கை உண்டு.

இறுதி வணக்கங்கள் எஸ்.எம்.ஜி! இருக்கின்ற சிறைகளையும் இனிவரும் சிறைகளையும் பற்றி எழுத வல்லமை தருவீர்களாக! ஒவ்வொரு உயிரும் உன்னதமானது என்ற சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த நீங்கள் குறைந்தது 146, 679 தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என அறியும் நீதிக்கான போராட்டம் தேக்கமடையாமலிருக்கும் திடத்தினை அளிப்பீர்களாக! ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னரே அரசியல் கைதிகளின் விடுதலைக்காக எழுதிய நீங்கள், காத்திருப்போடும், கதறியழும் வாழ்வோடும் நகரும் தாய்களின் கண்ணீரை நிறுத்த வழிகாட்டுவீர்களாக!

*இந்தப் பதிவு நவம்பர் 16, 2017 எனது முகநூலில் பதிவேற்றப்பட்டது.

July 17, 2016

அயர்லாந்து: இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – II

Filed under: Uncategorized — Nirmanusan @ 2:18 pm

மீண்டெழுதல்

அழிக்கப்பட்ட நகரிலேயே புது அவதாரம் எடுத்து, தம் மக்களையும் போராளிகளையும் இழந்த இடத்திலேயே தம் இறைமையை மீட்பதற்கு சின் பையின் உறுதியெடுக்க, அதனைத் தொடர்ந்து, அதன் இராணுவக் கட்டமைப்பென கூறப்படுகின்ற அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (Irish Republican Army -IRA) ) அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான கெரில்லா போராட்டத்தை ஆரம்பித்தது. (அயர்லாந்து தொண்டர்கள் என்ற இராணுவ அமைப்பே 1916 தோல்விக்குப் பின்னர் ஜ.ஆர்.ஏ ஆக மாற்றம் பெற்றதென பரவலாக கருதப்படுகிறது.)

1919ல் ஆரம்பித்த சுதந்திரத்திற்கான போர் இருதரப்புக்குமிடையில் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை தொடர்ந்து 1921 ல் முடிவுக்கு வந்தது. அதன் பிரகாரம், ஆங்கிலேயருக்கும் அயர்லாந்துக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கத்தோலிக்கர்கள் வாழும் சுதந்திர அயர்லாந்து அரசாக ஒரு பகுதியும், புரொட்டஸ்தாந்தினர் வாழும் வடஅயர்லாந்து இன்னொரு பகுதியாகவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஐ.ஆர்.ஏயின் ஒரு பகுதியினர் எதிர்த்தனர்.

இதனோடு ஆரம்பித்த ஐ.ஆர்.ஏயின் பிளவு, காலத்துக்கு காலம் பல பிரிவுகளாக உருவெடுத்தது. அதேவேளை, அரசியல் இயக்கமான சின் பையினுக்குள்ளும் உள்ளக முரண்பாடுகள் தோன்றி சின் பையினுலிந்து ஒரு தொகுதியினர் வெளியேறி Fianna Fáil என்ற பிறிதொரு அமைப்பை தோற்றுவித்து தேர்தல்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இவ்வாறு, அரசியல் அமைப்பான சின் பையினுக்குள்ளும் ஆயுத அமைப்பான ஐ.ஆர்.ஏக்குள்ளும் பிளவுகளும் பிரிவுகளும் தோன்றின, தொடர்ந்தன.

எது எப்படி இருப்பினும், ஐக்கிய இராச்சியத்தின் சகல நேரடிக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுதலைபெற்று, இயேசுபிரான் மரித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த காலப்பகுதியில், அதாவது 18 ஏப்ரல் 1949 அயர்லாந்து குடியரசாக பூரணசுதந்திரத்துடன் மிளிரத்தொடங்கியது.

அடிப்படைகளில் விட்டுக்கொடுப்பில்லை

இருப்பினும், அயர்லாந்துக்கு உரித்தான வட அயர்லாந்தின் ஆறு தொகுதிகள் ஐக்கிய இராச்சியத்தோடு இருந்தமை அயர்லாந்தை உறுத்திக்கொண்டேயிருந்தது. முரண்பாடுகள் தொடர்ந்த போதும் சின் பையினும் ஜ.ஆர்.ஏயும் பிளவுபடாத ஐக்கிய அயர்லாந்தை வலியுறுத்தி வந்தன. இதன் நிமிர்த்தம், 1969 தொடக்கம் 1967 வரை ஐ.ஆர்.ஏயின் தாக்குதல்கள் தொடர்ந்தது. மறுபுறம், பிரித்தானியப் படைகளின் தாக்குதல்களும் தொடர்ந்தது.

பிரித்தானியப் படைகளின் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஐ.ஆர்.ஏக்கான ஆதரவுத் தளத்தை பலப்படுத்தியதோடு, சுதந்திர அயர்லாந்தே தமக்கான தீர்வாக அமையும் என்ற சிந்தனையையும் தொடர்ந்து தூண்டியது. 1977ல் ஐ.ஆர்.ஏ மீள ஒருங்கிணைக்கப்பட்டது. இவர்களுக்கு பலஸ்தீன விடுதலை இயக்கம் உட்பட வேறு பல வெளிநாட்டு உதவிகளும் கிடைத்தது. 1981 ல் ஐ.ஆர்.ஏயின் ஏழு அங்கத்தவர்கள் உட்பட பத்துபேர் உண்ணா நோன்பிருந்து அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக உயிர்நீத்தார்கள்.

உண்ணாவிரதத்துக்கோ அயர்லாந்தின் உணர்வுகளுக்கோபிரித்தானியா மதிப்பளிக்கவில்லை. ஆனால், இது அயர்லாந்தின் போராடும் உணர்வின் இன்னுமொரு பரிமாணத்தைக் காட்டியதோடு, பிரித்தானியாவின் அடக்குமுறை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்ந்தாலும் அயர்லாந்து அடிபணியப்போவதில்லை என்பதை எடுத்துக் காட்டியது.

சமகாலத்தில், சின் பையினும் ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்திற்கான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டுவந்தது. உண்ணாவிரதத்திற்குப் பிற்பாடு, ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அயர்லாந்தின் சுதந்திரப் போராட்டத்தை, அரசியல் சனநாயகப்படுத்துவதற்கு முயற்சித்தார்கள் சின் பையினின் முக்கிய தலைவர்களான ஜெரி அடம்சும் ( Gerry Adams) மார்ட்டின் மக்கின்னசும் (Martin McGuiness).

இதற்குப் பிற்பாடும் பல்வேறு முரண்பாடுகள் வெவ்வேறு பக்கங்களிலிருந்த எழுந்தது. ஆயினும், இறுதியில் 1998ல் பெரியவெள்ளிஉடன்படிக்கை(Good Friday Agreement) அல்லது பெல்பாஸ்ட் உடன்படிக்கை (Belfast Agreement) கைச்சாத்திடப்பட்டது. இது அதிகாரப் பரவலாக்கலுக்கும், வட அயர்லாந்து தொடந்தும் ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இருக்க ஒப்புதல் அளித்தது. 28 யூலை 2005ல் தமது போரியல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக ஐ.ஆர்.ஏ அறிவித்தது.

அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டம், போர் நிறுத்த உடன்பாடுகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்று நீடித்த போதும் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வடஅயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட்டு ஐக்கிய அயர்லாந்து உருவாக வேண்டும் என்ற இலட்சியத்தில் சின் பையின் தொடந்தும் உறுதியாக இருந்து வருகிறது. அதன் வெளிப்பாடே, ஐக்கிய அயர்லாந்தின் உருவாக்கத்திற்கான குரலை ஐக்கிய இராச்சியத்தின் யூன் 23 வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த பின்னும் உரத்து கூறியுள்ளது சின் பையினின் தலைமை.

இதேவேளை, வட அயர்லாந்தின் கணிசமான மக்களும் அயர்லாந்து குடியரசுடன் இணைவதற்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதோடு, அயர்லாந்து குடியரசின் கடவுச்சீட்டுக்களுக்கும் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதென்ற பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வடஅயர்லாந்து மக்களின் முடிவுகளை துரிதப்படுத்தியிருப்பினும், வட அயர்லாந்து மக்கள் மத்தியில் அயர்லாந்து குடியரசுடன் தாம் இணைய வேண்டும் என்ற மனமாற்றம் இதற்கு முன்னரே துளிர்விடத் தொடங்கிவிட்டது.

இதற்கு அயர்லாந்தின் அடையாளத்தை நிலைநிறுத்துவதோடு, பிரித்தானியாவின் சட்ட அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்ற அயர்லாந்தின் அரசியல் பீடங்களுக்கும், அயர்லாந்தின் சுதந்திரத்தை, அயர்லாந்துக்கான சர்வதேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதில் முதன்மை பாத்திரம் வகித்த, புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் அயர்லாந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கும் இடையில் நிலவிய வினைத்திறன் மிக்க கூட்டுச் செயற்பாடுகள் வழிவகுத்தன.
புலம்பெயர் அயர்லாந்து மக்கள்

அயர்லாந்தில் இடம்பெற்ற சுதந்திரத்துக்கான போர் பலமில்லியன் அயர்லாந்து மக்களை உலகெங்கும் புலம்பெயர வைத்தது. அயர்லாந்து குடியரசில் வாழும் அயர்லாந்து மக்களின் எண்ணிக்கையோ சுமார் 4.6 மில்லியன். ஆனால், அயர்லாந்தை அடியாகக் கொண்ட சுமார் 70 மில்லியனுக்கு மேற்பட்ட அயர்லாந்து மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்த அயர்லாந்து மக்கள், உலகில் பலம் வாய்ந்த புலம்பெயர்ந்த சமூகக் கட்டமைப்புகளில் முக்கியமான தரப்பாகும். அவர்கள் தனித்து உணர்வுரீதியான செயற்பாடுகளுடன் மட்டும் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவில்லை. மாறாக,  அயர்லாந்து குடியரசின் சுதந்திரம் தொடங்கி ஐக்கிய அயர்லாந்தின் உருவாக்கம் வரை சொந்த நிகழ்ச்சி நிரலில் நேர்த்தியான நிர்வாக முகாமைத்துவத்தோடு தமக்குரிய செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

GA-BC

இவர்களுடைய செயற்த்திறன் மிக்க நடவடிக்கையின் விளைவால், அமெரிக்காவின் சனாதிபதியாக பில் கிளின்டன் அவர்கள் இருந்தபோது, சின் பையினின் முக்கிய தலைவரான ஜெரி அடம்ஸ் அவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஐ.ஆர்.ஏயை பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு அதனோடு ஜெரி அடம்ஸ் தொடர்புபடுத்தப்பட்டதோடு, ஜெரி அடம்ஸ் அமெரிக்காவுக்குள் நுழைவதை அமெரிக்கா இராசாங்க திணைக்களம் முழுமையாக எதிர்த்தது. ஆயினும், இறுதியில் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் அயர்லாந்து மக்கள், அமெரிக்காவின் தீர்மானம் மெற்கொள்ளும் தரப்புகளை இலக்குவைத்து மேற்கொண்ட நேர்த்தியான பரப்புரைகளும் செயற்திட்டங்களும் ஜெரி அடம்ஸ் அமெரிக்காவுக்குள் நுழைவதை உறுதிப்படுத்தியது.

நாற்பத்தெட்டு மணித்தியால அனுமதிதான் கிடைத்ததாயினும், இது சர்வதேச ரீதியில் சீன் பையின் தனிமைப்படுத்தப்பட்டதை முறியடிக்க பக்கத்துணையாக மாறியது. உலகெங்கும் பரந்து வாழ்ந்தாலும் தமது அடி அயர்லாந்து என்ற அடையாளத்துக்கு இன்றும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அயர்லாந்தை அடியாகக் கொண்டவர்கள்.

1916 எழுச்சி தோல்வியில் முடிந்த போதும் அது அயர்லாந்தின் விடுதலைக்கு வித்தாக அமைந்தது. ஆதலாலேயே, அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்த அயர்லாந்தின் பதினாறு போராளிகள் படுகொலைசெய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் நூறாவது ஆண்டிலும் அயர்லாந்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் இடம்பெற்றது.

சமகாலப்பகுதியில், அயர்லாந்து புலம்பெயர் சமூகங்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகள், சுதந்திரப் போராட்டத்தையும் அதற்காக வீழ்ந்தவர்களையும் கௌரவிப்பதாக அமைந்தது. கூட்டு நினைவுகூரல் என்பது அயர்லாந்தின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்ததாக இருந்துவருகிறது. அது, அயர்லாந்தின் எழுச்சியிலும் அயர்லாந்தின் அடையாளத்தை கட்டமைப்பதிலும் பங்கு வகிக்கிறது.

ஈழத்தமிழர்களுடனான தொடர்பு

மே 2009ல் ஈழத்தமிழர்கள் மீதான இனஅழிப்பு இடம்பெற்ற பின், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாகவும், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் வேண்டி அயர்லாந்திலுள்ள கணிசமான கத்தோலிக்க தேவாலயங்களில் மணியோசையை தொடர்ந்து அமைதி வணக்கமும் செலுத்தப்பட்டது.

சனவரி 2010ல் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்துள்ளது. இனஅழிப்பு தொடர்பாக மேலதிக விசாரணைகள் தேவையென அறிவித்தது. இதன் நிமிர்த்தமே, டிசம்பர் 2013ல் ஜேர்மனியின் பிறேமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு இனஅழிப்பை மேற்கொண்டுள்ளது என்ற தீர்ப்பை வழங்கியது.

அழிவுகளுக்கு மத்தியிலும் சுதந்திரத்துக்கான பயணத்தைத் தொடர்ந்து இலட்சியத்தை அடைந்த தேசம் எமக்கான பாடத்தை மட்டும் சொல்லிநிற்கவில்லை. மாறாக, ஈழத்தமிழர்களின் நீதிக்காக சில பங்களிப்புகளையும் வழங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் தாயக அரசியல் தரப்புகளும், தமிழர் தாயகத்தை மையப்படுத்திய புலம்பெயர் தமிழ் அமைப்புகளும், நீதி மறுப்பும், தமிழின அடையாள அழிப்பும் மிகநுட்பமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழலில், தமிழர் தேச நலனை அடைவதற்காக என்ன செய்யப் போகிறார்கள்? எப்படிச் செய்யப் போகிறார்கள்?

மாறிவரும் உலக ஒழுங்கையும், சுதந்திரத்திற்காக போராடிய, போராடிக்கொண்டிருக்கும் அனுபவங்களையும் வரலாறுகளையும் மனதிற் கொண்டு, தமிழர் தேச அணுகுமுறைகளிலும் உபாயங்களிலும் மாற்றம் ஏற்படாதவிடத்து, தமிழர்களின் இலட்சியப் பயணம் மேலும் பல நெருக்கடிகளை எதிர்கொள்வதோடு, இலக்கிலிருந்து இன்னும் தூர விலகிவிடும்.

July 12, 2016

அயர்லாந்து: இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – I

Filed under: Uncategorized — Nirmanusan @ 11:39 am

பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Féin), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் சனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின்த லைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வடஅயர்லாந்தின் 56ம% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர்ந்தும் அங்கம் வகிக்கவே வாக்களித்திருந்தனர்.

சிதையாத சித்தாந்தம்

பிரித்தானியாவின் பிரித்தாளும் தந்திரத்துக்குள் சிக்கிய அயர்லாந்துக்கே உரித்தான வடஅயர்லாந்து, மீண்டும் அயர்லாந்து குடியரசுடன் இணைக்கப்பட்டு ஐக்கிய அயர்லாந்து உருவாகும் என்ற போராட்டம் நீண்டது. அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான ஆயுதப் போராட்டத்தை நடாத்திய அயர்லாந்து குடியரசு இராணுவம் – ஐ.ஆர்.ஏ (Irish Republican Army -IRA) பின்னர் ஐக்கிய அயர்லாந்தையும் வலியுறுத்தி தனது தாக்குதல்களை முன்னெடுத்தது. அதேபோன்று, சின் பையின்(Sinn Féin) என்ற அயர்லாந்தின் முதன்மையான அரசியல் அமைப்பு அரசியல் போராட்டத்தை சுமார் நூறு வருடங்களாக மேற்கொண்டுவருகிறது. சின் பையினின் ஆயுத அமைப்பே ஐ.ஆர்.ஏ என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தாலும் சின் பையினின் அயர்லாந்தின் சுதந்திரத்துக்கான போராட்டம் தடைகளை தகர்த்து முன்னகர்ந்தது.

ஆங்கில அதிகாரத்தை அயர்லாந்தில் நிலைநிறுத்த முயற்சித்த பிரித்தானியர்களுக்கும், தனித்துவத்தையும் தன்னாட்சியைiயும் நிலைநிறுத்த போராடிய அயர்லாந்து குடியரசுக்குமிடையிலான மோதுகை சுமார் எண்ணூறு வருட வரலாற்றைக் கொண்டது. ஆயினும், கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அயர்லாந்தை புரொட்டஸ்தாந்தை பெரும்பான்மையாகக் கொண்ட ஐக்கிய இராச்சியத்துடன் 1801ல் இணைத்த போது தீவிர ஆயுத மோதல்களுக்கான அடித்தளமிடப்பட்டது.

விடுதலைக்கான வித்து

பிரித்தானியாவின் பிடிக்குள் அயர்லாந்து கடுமையாக சிக்குண்டிருந்த காலம். அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் தொடர்ந்தும் வாழமுடியாது. எம்மை எதிர்த்து நிற்பது எம்மைவிட பலம்வாய்ந்த படைகள் என்றாலும் எமது தேசத்தின் சுதந்திரத்திற்காக நாம் போராடியே ஆகவேண்டும் என்ற முடிவு அயர்லாந்தின் புரட்சியாளர்களால் எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட முடிவை அமுல்படுத்துவதற்காக இயேசுபிரான் மரித்து அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த காலப்பகுதி நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் நிமிர்த்தம் இந்த எழுச்சி Easter Rising (ஈஸ்டர் எழுச்சி) என பெயரிடப்பட்டு
24 ஏப்ரல் 1916 வெடித்தது. இருப்பினும், எழுச்சி ஆரம்பிப்பதற்கு அண்மித்த நாட்களில் தலைமைத்துவத்திற்கு இடையில் உறுதியற்ற தன்மையும், உடன்பாடற்ற தன்மையும் காணப்பட்டது. இது, போராளிகளுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணியதோடு தாக்குதல் திட்டத்தை பிற்போட நிர்ப்பந்தித்தது. அத்துடன், அயர்லாந்து தொண்டர்கள் (Irish Volunteers) படைப்பிரிவைச் சார்ந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் தமது தலைமைத்துவத்தின் வேண்டுதலுக்கு இணங்க தாக்குதல்களில் இறங்கவில்லை. ஆதலால், பிரசைகள் இராணுவம் (Citizen Army) என்ற மற்றைய அமைப்பின் படைப்பிரிவே பெரும்பாலான தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்கியது. அத்துடன், ஜேர்மனியிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆயுதங்களும் இராணுவத் தளபாடங்களும் வழங்கல் தடைப்பட்டதால் உரிய நேரத்திற்கு வந்தடையவில்லை. இத்தகைய உறுதிப்பாடற்ற தன்மைகளால், ஆரம்பத்தில், அயர்லாந்து தழுவிய ரீதியில் நடாத்தப்படுவதாக திட்டமிடப்பட்ட புரட்சி இறுதியில் டப்ளின் நகரத்தை பிரதானமாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்டது.

டப்ளின் நகரில் அமைந்திருந்த பொதுத் தபால் நிலையம் உட்பட்ட கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக கருதப்பட்ட இடங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றினார்கள். கைப்பற்றிய பொதுத் தபால் நிலைய படிக்கட்டுக்களில் சக போராளிகள் புடைசூழ நின்ற பற்றிக் பியேஸ் (Patrick Pearse) அவர்கள் அயர்லாந்து மக்களுக்கான அயர்லாந்து குடியரசின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார். கடவுளினதும் மரணித்த எங்கள் சந்திதியின் பெயரிலும், தேசத்தின் பழைய மரபை அயர்லாந்து அன்னை எங்கள் ஊடாக பெற்றுக்கொள்கிறாள். தனது கொடிக்குக் கீழ் அணிதிரள அழைக்கும் அயர்லாந்து அன்னை, தனது சுதந்திரத்திற்காக போராடுவதற்கு அழைக்கிறார் என்ற தொனிப்பட்ட அந்த அறிக்கை நீண்டு சென்றது. அயர்லாந்து குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடியும் ஏற்றப்பட்டது. அந்தநிறங்களே அயர்லாந்தின் தேசியக்கொடியை இன்றுவரை அலங்கரிக்கின்றன.

Screen Shot 2016-07-12 at 9.34.07 PM

தவிர்க்கமுடியாத தோல்வி

போராட்டம் தொடங்கிய அடுத்த நாளே பெருமளவான பிரித்தானியா படைகள் டப்ளின் நகரில் வந்து குவிந்தனர். இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. மூன்றாவது நாள், பிரித்தானிய படைகளின் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தது. துப்பாக்கி ரவைகளும், குண்டுகளும் முடிவடைந்த பின் ஒரு முனையில் இருந்த போராளிகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைகின்றனர். அதனைத் தொடர்ந்து நகரத்துக்குள் நுழைந்த பிரித்தானியப் படையினருக்கு உணவு வழங்கி வரவேற்றார்கள் அயர்லாந்து மக்கள்.

இன்னொரு முறையில் தீவிர மோதல்கள் தொடர்ந்தது. அதில் பிரித்தானியப் படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெனரல் சேர் ஜோன் கிரென்பெல் மக்ஸ்வேல் பிரித்தானியாவிலிருந்து களமிறக்கப்பட்டார். தீவிர தொடர் மோதல்களால் நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தீ பரவியது. பொதுத் தாபால் நிலையத்திலிருந்தும் போராளிகளை பின்வாங்குமாறு கட்டளை பிறப்பித்தார் பற்றிக் பியேஸ். போராக மாறிய போராட்டத்தின் ஆறாவது நாள் நிபந்தனையற்ற சரணடைவுக்கு போராளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஆறு நாட்களில் தோல்வியில் முடிந்த Easter Rising ல் சில நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினார்கள். Easter Rising ற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 3000 மேற்பட்ட அயர்லாந்து மக்கள் கைதுசெய்யப்பட்டனர். டப்ளின் நகரம் அழிவடைந்தது.

அயர்லாந்தின் சுதந்திரத்திற்கான புரட்சிக்கு தலைமை வகித்த அயர்லாந்தின் போராளிகள் அடையாளம் காணப்பட்டு தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டனர். பிரித்தானியப் படைகளின் காரணமற்ற கைதுகளும் தடுத்து வைப்புகளும் ஆத்திர அலையை அயர்லாந்து மக்களிடம் ஏற்படுத்தியது.

ஈற்றில் மக்கள் மயப்படுத்தப்படாத போராட்டம், தலைமைத்துவங்களுக்கிடையில் நிலவிய முரண்பாடுகள், திட்டமிடல், தொடர்பாடல், ஒருங்கிணைப்பு மற்றும் கட்டளை வழங்கலில் காணப்பட்ட பலவீனங்கள் போன்றவற்றால் Easter Rising தோல்வியில் முடிந்தது.

தோல்விக்கு பின்னர் தோன்றிய மக்கள் எழுச்சி

அந்தப் பொழுதுகளில் விடுதலைப் பொறியொன்று வெளிக் கிளம்புமென்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. நிலைமை மாறியது. தோல்வியிலிருந்து தோற்றம் பெற்றது சுதந்திரத்துக்கான திறவுகோல். இழப்புகள், வலிகள், தோற்றுப்போனோம் என தோற்றிய எண்ணப்பாடுகள், தொடர்ந்த அவமானங்களும் அடக்குமுறையும் மக்களை அயர்லாந்தின் சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தூண்டியது.

பற்றிக் பியேஸ் உட்பட Easter Rising ற்கு முன்னிலையிருந்து செயற்பட்ட பலரும் தேசியவாதத்தின் அடிப்படையில் தோன்றிய எழுத்தாளர்களாக, கவிஞர்களாக, அரசியல் செயற்பாட்டாளர்களாக இருந்தார்கள். எங்களை அழிப்பதன் ஊடாக அயர்லாந்தின் சுதந்திர தாகத்தை அழிக்க முடியாது. நாம் மரணித்தாலும் சுதந்திரத்தில் விருப்புக்கொண்ட எமது எதிர்கால சந்ததி தொடர்ந்து போராடும். நாம் விட்டுச் செல்லும் வரலாறும் எமது அர்ப்பணிப்புகளும் வீண் போகாது என்ற தொனிப்பட்ட பற்றிக் பியேஸ் போன்றவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் அயர்லாந்தின் தேசியவாதத்தை பலப்படுத்தியிருந்தது.

இதன் காரணமாகவே, படுகொலைசெய்யப்பட்ட உடல்களை உறவினர்களிடம் கையளிக்கக்கூடாது என்ற கருத்தை பிரித்தானியா கட்டளைத் தளபதியான கிரென்பெல் மக்ஸ்வேல பிரித்தானியவின் அன்றைய பிரதமர் அஸ்குயித் (Asquith) அவர்களுக்கு தெரியப்படுத்தினார். ஏனெனில், அயர்லாந்தில் வேரூன்றத் தொடங்கிய தேசியவாதம் இந்த உடலங்களை கண்டதும் கிளர்ந்தெழும். அது ஒரு எழுச்சியாக மாறும் என்ற எண்ணமே உடலங்களை கையளிக்கக் கூடாது என்ற அவரது நிலைப்பாட்டுக்கு காரணமாகும்.

இது போன்ற விடயங்கள், அயர்லாந்து மக்களின் ஆத்திரத்தையும் சுதந்திரத்துக்கான அபிலாசையையும் இரட்டிப்பாக்கியதுடன் விடுதலைக்கான வேட்கைக்கு வித்திட்டது.

அயர்லாந்தையும் உள்ளடக்கிய ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத் தேர்தல் 1918ல் இடம்பெற்றது. இதில் அயர்லாந்தின் சுதந்திரத்துக்காக போராடிய சின் பையின்(Sinn Féin) அமைப்பும் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியது. பிரித்தானியர்களுக்கு சார்பானவர்கள் அயர்லாந்தில் தெரிவுசெய்யப்படுவதை தவிர்க்கும் நோக்கோடும் தாமே அயர்லாந்து மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்பதை வெளிப்படுத்தும் எண்ணத்தோடும் ஒரு தந்திரோபாயமாகவே சின் பெயின் ஐக்கிய இராச்சியம் நடாத்திய தேர்தலில் பங்குபற்றியது. ஆயினும், ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் அமர்வதை புறக்கணித்தார்கள். அத்துடன், அரசியல் போராட்டத்தின் அங்கமாக, அயர்லாந்துக்கான நாடாளுமன்றத்தை கூட்டி அயர்லாந்தின் சுதந்திர பிரகடனத்தை வெளியிடுவதற்காக போரினால் சிதைக்கப்பட்ட டப்ளின் நகரில் 1919ல் ஒன்றுகூடினார்கள்.

(தொடர்ச்சி அடுத்த வாரம்…)

July 3, 2016

பிரித்தானியாவின் பின்வாங்கல் – ஸ்கொட்லாந்தின் முன்நகர்வு -சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் முடிவு

Filed under: Uncategorized — Nirmanusan @ 7:22 am

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்காக, பிரித்தானிய மக்களிடையே நடாத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், 51.9% பிரித்தானியர்கள் பிரிந்து செல்வதென முடிவெடுத்துள்ளார்கள். இந்த முடிவானது, பிரித்தானியாவில் மட்டும் தாக்கத்தை செலுத்தப்போவதில்லை. மாறாக, சமகால உலக ஒழுங்கை மாற்றியமைக்கப்போகிறது. இதில் குறிப்பாக அரசியல், பொருளாதாரம் சார்ந்த விடயங்கள் பெரும்பங்கினை வகிக்கப் போகின்றன.

Bபொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து அடுத்த சிலமணித்தியாலங்களுக்குள், உலகளாவிய ரீதியில் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளின் பங்குச்சந்தை ஆட்டம் காணத்தொடங்கியது. சீனாவின் சந்தை கூட யூன் 24ம் திகதி 1% வீழ்ந்தது. ஆயினும், யூன் 27ம் திகதி மீண்டெழுந்துவிட்டது. பிரித்தானிய பவுண்சின் பெறுமதி 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதற்தடவையாக பெரும்வீழ்ச்சி கண்டது.

மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பிரித்தானியாவினதும் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதேவேளை, ஸ்கொட்லாந்து தேசம் தாம் சுதந்திர நாடாக மலர்வதற்கான செயற்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், எதனையும் உறுதிபடக் கூறக்கூடியதாக இன்றைய சூழல் இன்னும் கனியவில்லை. ஆயினும், உலக அரசியலில் வல்லன வாழும், பலம் நிர்ணயிக்கும் என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்படப் போகிறது.

ஒரு காலத்தில் உலகின் பெரும்பாலான பகுதிகளை ஆண்ட பிரித்தானியா இன்று தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான பெரும் போராட்டத்தை நடாத்த வேண்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு நாம் வெளியேறினால், ஐரோப்பிய ஒன்றியம் பலவீனம் அடையும் என எண்ணிய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த பிரித்தானியா அரசியல்வாதிகளுக்கு, இன்று ஐக்கிய இராச்சியம் பிளவுபடுவதை தடுக்க முடியுமா என்ற நிலை தோன்றியுள்ளது.

ஏனெனில், ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றே 62% ஸ்கொட்லாந்து மக்களும் மற்றும் 56% வட அயர்லாந்து மக்களும் வாக்களித்திருந்தனர். ஆயினும், ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்த முடிவென்பது ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து மக்களின் அரசியல் விருப்புக்கு இசைவாக வெளிவரவில்லை. இதனால், தமது தேசங்களின் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க வேண்டும் என குறித்த இரண்டு தேசங்களும் முடிவெடுத்துள்ளன. இதில், ஸ்கொட்லாந்து பெரும் முனைப்போடு உடனடியாகவே செயற்படவும் தொடங்கிவிட்டது.

சுதந்திர நாடாக திகழ்ந்த ஸ்கொட்லாந்து 1707 ல் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. ஆயினும், அன்றிலிந்தே தாம் தொடந்தும் ஒரு தனிநாடகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்கொட்லாந்து மக்களின் ஒரு சாராரிடம் காணப்பட்டது. தமது தேசத்தின் சுதந்திரத்தை வலியுறுத்தி காலத்திற்கு காலம் பல்வேறு போராட்டங்களை ஸ்கொட்லாந்து மக்கள் முன்னெடுத்தார்கள். இதற்கு ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி (Scottish National Party – SNP) தலைமை வகித்தது. இருப்பினும், சுதந்திரத்திற்கான இவர்களின் போராட்டங்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை. ஆனால், அவர்களுடைய ஒவ்வொரு போராட்டமும், தொடர்ச்சியான போராட்டங்களுக்கான அடித்தளத்தையும், எதிர்கால வெற்றிக்கான அடிப்படைகளையும் உருவாக்கியது.

பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான முதலாவது பொது வாக்கெடுப்பு செப்டெம்பர் 18, 2014ல் இடம்பெற்றது. இதில் பிரிந்து செல்லவேண்டும் என 44.70% மக்களும், பிரிந்து செல்லக்கூடாது என 55.3% மக்களும் வாக்களித்தனர்.

பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கு ஆதரவான  “ஆம்” என்ற வாக்குகளே வெல்லும் என இறுதி நாள் வரை எதிர்பார்க்கப்பட்ட போதும், முடிவு எதிர்மாறானதாகவே இருந்தது.

பிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்க முடியாது என்ற அச்சுறுத்தல், தம்மை நிலைநிறுத்துவதற்கான பொருளாதார வளம் ஸ்கொட்லாந்திடம் இல்லையென்ற பிரிந்து செல்வதற்கு எதிரானவர்களின் பிரச்சாரம் ஒரு புறமும், ஸ்கொட்லாந்து பிரித்தானியாவுடன் இணைந்திருந்தால் பொருளாதார ரீதியான பெரும் ஆதரவு வழங்கப்படும் என பிரித்தானியா வழங்கிய வாக்குறுதி மறுபுறமும் ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்கு எதிரான இல்லையென்ற வாக்குகள் வெற்றிபெற உதவியது.

பிரித்தானியாவிலிருந்து பிரிந்து சென்றால், ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது என அச்சுறுத்திய பிரித்தானிய, இன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவெடுத்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கே ஸ்கொட்லாந்து வாக்களித்தது. மூலோபாயத்துடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நகர்வின் ஊடாக, எதனை காரணம் காட்டி ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் சுமார் 21 மாதங்களுக்கு முன்னர் தடுக்கப்பட்டதோ, இன்று அதனையே காரணமாகக் காட்டி இறைமையும் சுதந்திரமும் உள்ள தேசமாக மலர்வதற்கு ஸ்கொட்லாந்து தன்னை தயார்படுத்துகிறது.

செப்டெம்பர் 2014ல் இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த பின், இந்த சந்ததி மட்டுமல்ல, இதற்கு அடுத்த சந்ததிகூட ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான கனவை ஒத்திவைக்கும் எனக் கூறினார்கள் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கு எதிரான தரப்புகள். ஆனால், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான இரண்டாவது பொதுவாக்கெடுப்புக்கான தயார்ப்படுத்தல்கள் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்குள் மீண்டும் துளிர்விடத் தொடங்கியுள்ளது.

பொதுசன வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியின் அன்றைய தலைவரான அலெக்ஸ் சல்மொன்ட் (Alex Salmond ), ஸ்கொட்லாந்து மக்களின் சனநாயக ஆணைக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்ததாடு, ஸ்கொட்லாந்துக்கு சுதந்திரம் இந்தக் கட்டத்தில் தேவையில்லை என பெரும்பாலனவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். ஆயினும், 1.6 மில்லியன் மக்கள் சுதந்திரம் வேண்டும் என்ற தங்கள் அபிலாசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எங்கள் கனவுக்கு எப்போதும் மரணமில்லை என்ற தொனிப்பட்ட கருத்தையும் தெளிவாகவும் உறுதியாகவும் கூறிய அலெக்ஸ் சல்மொன்ட், அரசியலிருந்து விலகி இருந்த பல ஸ்கொட்லாந்து மக்களை இன்று அரசியல்மயப்படுத்தி இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துவரும் அலெக்ஸ் சல்மொன்ட் பொதுவாக்கெடுப்பு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 30 மாதங்கள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர். பொதுசன வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.

அதன்பின்னர் ஸ்கொட்லாந்தின் இன்றைய முதன்மை அமைச்சராக இருக்கின்ற நிக்கொல ஸ்ரேயென் (Nicola Sturgeon) ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சிக்கு தலைமையேற்றார். அலெக்ஸ் சல்மொன்ட் அவருக்கு ஆதரவாக இருந்து வந்ததோடு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தை மனதிலிருத்தி தொடர்ந்தும் செயற்பட்டுவந்தார். அதன் வெளிப்பாடே ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதை உறுதிசெய்வதற்காக தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான இராசதந்திர செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிக்கொல ஸ்ரேயென், ஸ்கொட்லாந்தின் இரண்டாவது பொது வாக்கெடுப்பு தொடர்பாக கருத்துருவாக்கம் செய்வதற்கும் ஊடகங்கை கையள்வதற்குமான பொறுப்பை அலெக்ஸ் சல்மொன்ட்டிடம் கையளித்துள்ளார்.

Nicola

நாற்பத்தைந்து வயதான நிக்கொல ஸ்ரேயென் மூத்த அரசியல்வாதிகள் பலரையம் வியப்பில் ஆழ்த்தக்கூடிய வகையில் தீர்மானங்களை மேற்கொள்பவர். எந்தவிடயத்தையும் ஆழமாக கூர்ந்து கவனித்து நகர்வுகளை மேற்கொள்பவர். 2010ல் இடம்பெற்ற தேர்தலில் ஆறு ஆசனங்களை மட்டுமே பெற்ற ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சி 2015 இடம்பெற்ற தேர்தலில் 59 ஆசனங்களில் 56 ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டுவதற்கு காரணமாகத் திகழ்ந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது பிரிந்து செல்வதா என்பதை தீர்மானிப்பதற்கான பொதுவாக்கெடுப்புக்கு விவகாரம் உரிய கவனத்தைப் பெறத்தொடங்கி நிறைவடையும் வரை பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் குழப்ப நிலையில் இருக்க தெளிவான சிந்தனையோடு செயற்பட்டவர் நிக்கொல ஸ்ரேயென். அதன்காரணமாகவே, பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்த அடுத்த சில மணித்தியாலங்களிலேயே தனது இலக்கை நோக்கிய பயணத்தில் விரைவாகவும் விவேகமாகவும் செயற்படத் தொடங்கினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை உறுதிசெய்வதோடு ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தையும் இறமையையும் வென்றெடுப்பதற்கான தயார்ப்படுத்தல்களை விவேகமாக முன்னெடுக்கிறார். இவை இரண்டும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதில் ஒன்று கைகூடாமல் போனாலும் தனது இலக்கு முழுமையான நலனை அடையாது என்பதை புரிந்து அதற்கேற்றவாறு காய்களை நகர்த்துகிறார்.

தேச விடுதலைக்கான பயணம் நெருக்கடிகள் நிறைந்த நீண்ட பயணம் என்பதை நிக்கொல ஸ்ரேயென் சந்திக்கும் சவால்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின், ஸ்கொட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதை எதிர்க்கிறது. ஸ்கொட்லாந்து கற்றலோனியாவினதும் பாஸ்க் இனங்களினதும் சுதந்திரத்துக்கான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக, ஸ்கொட்லாந்தின் முனைப்புகளை முளையிலேயே கிள்ளியெறிய முயல்கிறது ஸ்பெயின். கொசொவோ சுதந்திரத்தை அங்கீகரிக்காத ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஸ்பெயின் முக்கியத்துவம் மிக்க நாடாகும்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் பலம்மிக்க நாடான பிரான்சும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஸ்கொட்லாந்து பிரித்தானியாவின் அங்கமாக உள்ளவரை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க முடியாது என்ற பிரான்சின் நிலைப்பாடு, ஸ்கொட்லாந்து சுதந்திரமடைந்தால் மாறாக்கூடும். ஆனால், இது ஒரு நீண்ட பயணம். மறுபுறம் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கான பயணத்தை விரைவுபடுத்தும்.

Scotland.png

இதேவேளை, ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்பதற்கான இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டால், பிரிந்து செல்வதற்கு ஆதரவான தரப்பு வெற்றியடையும் என்பதற்கான சாத்தியப்பாடு அதிகமாகக் காணப்படுவதால், இரண்டாவது பொது வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கான அனுமதியை பிரித்தானிய நாடாளுமன்றம் இலகுவில் வழங்காது.

ஆயினும், இத்தனை சவால்களையும் அறியாதவர் அல்ல நிக்கொல ஸ்ரேயென். இருப்பினும், ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்தில் அவர்கொண்டுள்ள பற்றுறுதி எந்த சவால்களையும் எதிர்கொள்ளும் மனோதிடத்தை அவருக்கு வழங்கியுள்ளது. பதினாறு வயதில் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியில் இணைந்த நிக்கொல ஸ்ரேயென் மூன்று முறை தேர்தலில் தொடர்ச்சியாக தோல்வியுற்றார். ஆயினும், ஸ்கொட்லாந்தின் விடுதலை மீதான விருப்பு தோல்விகளை தாண்டியும் அவரை அரசியலில் நிலைத்திருக்க வைத்தது. அவரது சிறந்த தலைமைத்துவமும் நேர்த்தியான திட்டமிடலும் அவர் தலைமை வகிக்கும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்திசெய்ய வேண்டும் என்ற அவரது திடசங்கற்பமும் ஸ்கொட்லாந்தின் சுதந்திரத்திற்கு மீண்டுமொரு தடவை வழியேற்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களுக்கான தீர்வை மனதிற்கொண்டு ஸ்கொட்லாந்தின் அரசியல் தொடர்பாக கரிசனை செலுத்துகின்ற தமிழ்த் தரப்புகளும், சரியான தலைமைத்துவம் இன்றி தள்ளாடுகின்ற ஈழத்தமிழர்களும் ஸ்கொட்லாந்தின் தேசியக் கட்சியிலிருந்தும் அதன் தலைமைத்துவத்திலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை கவனத்திற்கொள்வார்களா?

May 14, 2016

நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: “எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம்”

Filed under: Uncategorized — Nirmanusan @ 6:28 pm

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு

சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரரே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வராலற்று முக்கியத்துவம் வாய்ந்த “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், ஒற்றையாட்சியை மையப்படுத்திய சிறீலங்காவின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டமை, “வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்” தோற்றத்திற்கும் அதன் வழிவந்த தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோரிக்கைகளுக்கும் வித்திட்டது.

1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமை, பௌத்த மதத்துக்கு அதிமுக்கியத்துவம், சிங்களம் மட்டுமே அரசகரும மொழி போன்ற விடயங்களுக்கு சிங்கள பௌத்த மேலாதிக்க மனப்பாங்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதனால், 1972ம் ஆண்டு அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளிலிருந்து தமிழ் அரசியல் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஏனெனில், குறித்த நகர்வானது, தமிழ் மொழியை, தமிழர்களின் இறமையை, சுதந்திரத்தை, கௌரவத்தை பேராபத்துக்குள் தள்ளுவதோடு, இலங்கைத் தீவில் வழக்கத்திலுள்ள பௌத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களையும், இனக்குழுமங்களையும் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

இதனை எதிர்கொள்ளும் முகமாக, தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் ஆகிய தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, 1972ல் தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கின. இதுவே, 1975ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியாக மாற்றம் பெற்றது.

தமிழர் தேசத்தின் இறைமையை நிலைநிறுத்தி, தமிழர்களின் மரபுவழித் தாயகத்தையும், பண்பாட்டையும் பாதுகாத்து, தமது நிலப்பரப்பில் தம்மைத் தாமே ஆட்சி செய்து, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனித்துவமான தேசமாக மிளிரும் சுதந்திர வேட்கையோடு, 14 மே 1976 அன்று, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” நிறைவேற்றப்பட்டது. தமிழர்களின் சுதந்திரத்தையும் இறைமையையும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தும் பொருட்டு சிறீலங்காவின் 1972 அரசியலமைப்பை “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” நிராகரித்தது.

சமஷ்டி தீர்வை வலியுறுத்தி வந்த தந்தை செல்வாவே, இறுதியில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழக் தனியரசுக்கு அடித்தளமிட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

இணைந்து வாழமுடியாது என்பதற்கான எடுத்துக்காட்டுகள்

அழகிய இலங்கைத் தீவில் வாழும் இனங்கள் அனைத்தும் ஐக்கியமாக ஆனந்தமாக வாழ வேண்டும் என முதலில் சிந்தித்து செயற்பட்டவர்கள் தமிழ்த் தலைவர்கள். ஆனால், காலத்திற்கு காலம் அந்த முயற்சிகளை சிங்களத் தலைவர்கள் பலவீனப்படுத்தினார்கள். அவற்றில் முக்கியமான சம்பவங்கள் சில கீழே.

இந்து-பௌத்த கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கான ஒரு நிதியம் சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களால் 1890 அளவில் தொடங்கப்பட்டது. இருப்பினும், பௌத்த தலைவர்களிடம் காணப்பட்ட பௌத்த மேலாதிக்கப் போக்கு, இந்துக்களுடன் இணைந்து பௌத்த கல்லாரிகளை அமைக்கும் சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களின் திட்டத்துக்கு முரணாக விளங்கியது. பௌத்த மேலாதிக்க மனப்பாங்கு சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களின் ‘இரு மத கூட்டுக் கனவை’ கலைத்தது. இதன் வெளிப்பாடே, யாழ்ப்பாணத்தில் இராமநாதன் கல்லூரி மற்றும் பரமேஸ்வராக் கல்லூரி போன்றவை தோற்றம்பெற வழிவகுத்தது.

பல்லினத்தன்மை கொண்ட ஐக்கிய இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை ஆரம்பித்து, அதற்காக முதன்முதலாக பணியாற்றியவர்கள் தமிழர்கள். இதன் அடிப்படையிலேயே 11 டிசம்பர் 1919 இலங்கை தேசிய கொங்கிரஸ் (Ceylon National Congress) சேர்.பொன்.அருணாச்சலம் அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆயினும், பல்லினங்களைக் கொண்ட ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்வபுவதற்கு சிங்களத்தின் மகாவம்ச மனப்பாங்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. பல்லின அடையாளங்களை அங்கீகரிக்காத சிங்கள மேலாதிக்க சிந்தனை, தமிழர்கள் தமது தனித்துவ அடையாளங்களை நிலைநிறுத்த வேண்டும் என்ற சிந்திப்புக்கு வித்திட்டது எனலாம். இதன் அங்கமாக, இலங்கை தேசிய கொங்கிரஸிலிருந்து வெளியேறிய சேர்.பொன்.அருணாச்சலம் அவர்கள் தமிழர் மகாசபையை உருவாக்கினார்.

6 செம்டெம்பர் 1946ல் ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, அதில் எஸ்.நடேசன் மற்றும் வீ.குமாரசுவாமி போன்ற தமிழ்த் தலைவர்களும் ஆரம்ப உறுப்பினர்களாக திகழ்ந்தனர். ஆயினும், 1955 களனியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மாநாட்டில், தனிச் சிங்கள சட்டத்துக்கு ஆதரவான சிங்களத் தலைவர்களின் சிங்கள மொழி மேலாதிக்க நிலைப்பாடு, பல தமிழ்த் தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது.

18 டிசம்பர் 1935ல் லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, காராளசிங்கம், நாகலிங்கம் மற்றும் சிற்றம்பலம் போன்ற தமிழ் தலைவர்கள் அதில் அங்கம் வகித்திருந்தார். ஆயினும், லங்கா சமசமாஜக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து 1966ல் நடாத்திய மேதின பேரணியில், தமிழர்களின் உணர்வை, உணவை, பண்பாட்டை இழிவுபடுத்துவது போல் எழுப்பிய ‘தோசை, மசாலா வடை எங்களுக்கு வேண்டாம்’ என்ற கோசம் பலபண்பாடுகளின் கூட்டாக இலங்கை கட்டியெழுப்பப்படலாம் என்ற கனவை கலைத்தது.

இன்றும் இடதுசாரி சிந்தனையை கொண்டதாக கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணி (Janatha Vimukthi Peramuna- J.V.P -ஜே.வி.பி) அடிப்டையில் ஒரு இனவாதக்கட்சி. இவர்களுக்கும் பிரதான அரசியல் கட்சிகளுக்கும், ஏனைய சிங்கள இடதுசாரி கட்சிகளுக்கும் இடையில் பாரிய கொள்கை வேறுபாடில்லை என்பதை எடுத்துக்காட்டும் சம்பவம், வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சரியாக பதினொரு வருடங்களுக்கு முன்னர், அதாவது 14 மே 1965ல் இடம்பெற்றது. இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைவராக நா.சண்முகதாசன் அவர்கள் விளங்கினார். இந்தக் கட்சியில் பெருமளவான சிங்களவர்கள் அங்கம் வகித்ததோடு, இளைஞர் அணியின் தலைவராக ரோகண விஜேயவீர செயற்பட்டார். ஒரு கட்டத்தில், தமிழர் ஒருவரை தலைவராகக் கொண்டு தாம் செயற்படமுடியாது எனக் கூறிய ரோகண விஜேயவீர, இலங்கை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியை, கட்சியிலிருந்து பிரித்தெடுத்து, சிங்களவர்களை மட்டும் கொண்ட கட்சியை 14 மே 1965ல் உருவாக்கினார். அந்தக் கட்சியே இன்று ஜே.வி.பி என அறியப்படும் மக்கள் விடுதலை முன்னணி ஆகும்.

பல் மொழி, பல் பண்பாடு, பல்லின, மத அடையாளங்களைக் கொண்டவர்கள் கூட்டிணைந்து வாழலாம் என்ற தமிழ்த் தலைவர்களின் சிந்தனையை, நம்பிக்கையை, முயற்சிகளை சிதைத்தவர்கள் சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட சிங்களத் தலைவர்களே என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளே மேற்காணப்படுபவை. இத்தகைய நிகழ்வுகள், தமிழர் தேசம் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் பிரிந்து சென்று தமிழீழத் தனியரசை அமைக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு தூபமிட்டது.

 
அவதாரங்களும் மௌனங்களும்

‘1972ம் ஆண்டு அரசியலமைப்பு’ தமிழர் தேசத்தில் சமகாலத்தில் இரு குழந்தைகள் அவதரிப்பதற்கு காரணமாக அமைந்தது. அந்த இரு குழந்தைகளினதும் கருவும் அது சார்ந்த இலக்கும் ஆரம்பத்தில் ஒன்றாக இருந்தது. ஆனால், அதனை அடைவதற்கான அணுகுமுறைகள் மாறுபட்டது.

ஒரு அணுகுமுறையின் அடிப்படையில், அமைதி வழியில், தமக்கான வாழ்வை தாமே நிர்ணயிப்பதற்கு தமிழர்கள் முயன்றார்கள். இணைந்து வாழ்வதற்கு இசைந்து வராத சிங்கள தேசம், தமிழர் தேசம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கும் தடைக்கல்லாக மாறியது. தமிழர்களின் சேர்ந்து வாழ்வதற்கான முன்னெடுப்புகளோ, அமைதி வழியிலான போராட்டங்களோ, தமிழின அழிப்பின் அங்கமான அடையாள அழிப்பையோ, சித்தாந்த சிதைப்பையோ தடுத்து நிறுத்தவில்லை. அத்துடன்;, சிங்கள தேசத்தின் தமிழர்களுக்கு எதிரான அநீதியும், அடக்குமுறையும், இனஅழிப்பும் தொடர்ந்தது. சிங்கள தேசத்தின் ஆட்சிகளும் காட்சிகளும் மாறின. ஆயினும், தமிழர்களுக்கு எதிரான உரிமை மறுப்பும், இனஅழிப்பும் தொடர்ந்தது. இத்தகைய நிலை தொடர்வதை தடுத்து நிறுத்த முடியாத சூழலில், தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிய தந்தை செல்வா மௌனமானார். இதன்பின்னர், தமிழர்களின் சுதந்திரத்திற்கான போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும் படியும், இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும் வரை அஞ்சாது போரிடும் படியும் தமிழ் தேசிய இனத்துக்கு, குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த தலைவர்கள் தடுமாறவும் தடம் மாறவும் தொடங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து, தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றது. காலப்போக்கில் தடம் மாறிய அரசியற் தலைவர்களைப் போலவே, ஆயுதம் ஏந்திப் போராடிய சில தமிழ் அமைப்புகளும் தடுமாறி இலக்கையும் மாற்றின. சிலர் அமைதியாகினார்கள். சிலர் அமைதியாக்கப்பட்டார்கள். விமர்சனங்களுக்கு அப்பால், ஆரம்பம் தொடக்கம் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவிக்கும் வரை, தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் வரிந்து கொண்ட இலட்சியத்திற்கு அமைவாக தமிழீழத் தனியரசு அமைப்பதற்கான போராட்டத்தை விட்டுக்கொடுப்பின்றி தொடர்ந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய நடைமுறை அரசு செயற்திறன் மிக்கதாக இருக்கும் வரை, சிங்கள குடியேற்றங்களின் பரவுதலை தடுத்தது. சிறீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியது.

ஒரு தேசத்தின் இருப்பை வெளிப்படுத்தும், மொழி, நிலம், பண்பாடு, வரலாறு, அடையாளங்கள் போன்றவை பேணிப் பாதுகாக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு, தமிழர்கள் ஒரு தேசம் என்ற கோட்பாட்டிலும் பார்க்க, மகிந்த ராஜபக்ச அவர்கள் தீவிரப்படுத்திய, சிறீலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவரும் ‘ஒரே நாடு, ஒரே தேசம்’ என்ற கோட்பாடு வலுவடையத் தொடங்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முகமாக, 19 மே 2009 அன்று சிறீலங்கா நாடாளுமன்றில் மகிந்த உரையாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு இடம்பெற்று சில மணித்தியாலங்களே கடந்த நிலையில் ஆற்றப்பட்ட அவ்வுரையில், “இது எங்கள் நாடு. இது எங்கள் தாய் நாடு. நாங்கள் ஒரு தாயின் பிள்ளைகள் போல இந்த நாட்டில் வாழவேண்டும். தமிழர்கள், முஸ்லீம்கள், பறங்கியர்கள் என்றோ, பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனம் என்றோ இனி இந்த நாட்டில் யாரும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். ஒரே தேசமாக, 182 அரசர்கள் 2500 ஆண்டுகளாக ஆண்ட இந்த நாட்டை தொடர்ந்தும் ஓரே தேசமாக நிர்வகிப்பேன் என்ற தொனியில் மகிந்தவின் உரையமைந்திருந்தது. இது, தமிழர்களது தனித்துவத்தை மட்டுமல்ல இலங்கைத் தீவின் பல்லினத்தன்மை மறுக்கப்பட்டதையும் எடுத்துக்காட்டியது.

இதன் பிற்பாடு, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 60ஆவது ஆண்டு விழா அலரி மாளிகையில் செப்டெம்பர் 2011 இடம்பெற்றபோது, அங்கு உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, இலங்கை என்பது ஒரு தேசம். இது பிளபுபடுவதற்கு எந்தக்கட்டத்திலும் அனுமதிக்கப் போவதில்லை எனக் கூறி, தமிழர்களுக்கென்று ஒரு தேசம் மலர்வதை மறுதலித்தார்.

தற்போது மகிந்தவின் ஆட்சியும் இல்லை. அவரது நிர்வாகமும் இல்லை. ஆனால், மகிந்த எதனை முன்மொழிந்தாரோ, மகிந்த எதனைப் பலப்படுத்தவும் பாதுகாக்கவும் முற்பட்டாரோ, அதனையே மைத்திரி-ரணில் அரசாங்கமும் வெவ்வேறு வடிவங்களில், பல்வேறு அணுகுமுறைகள் ஊடாக அமுல்படுத்தி வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேசம்’ என்ற இனஅழிப்பின் அங்கமான பொதுமைப்படுத்தல் ஊடாக, அடையாள அழிப்பு மிக நுட்பமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இது தமிழர் தேசத்தை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவ சோதனைச் சாவடியில் தொடங்கி சிறீலங்கா கிரிக்கெட் வரை வியாபித்துள்ளது.

1974 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை தீவில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றிய பேராளர்களுக்கு, தந்தை செல்வா மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தார். தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள தேசத்தின் இனஅழிப்பு தொடர்பாக அந்த மனுவிலே குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கள தலைவர்களுக்கு ஒரு ஒரு நோக்கம் உண்டு. அது, இரு இனங்கள், இரு மொழி, பல மதங்களை கொண்ட இலங்கைத் தீவை, ஒரு இனம் – சிங்கள இனம், ஒரு மொழி -சிங்கள மொழி மற்றும் பௌத்தம் மட்டும் கொண்ட ஒரு தேசமாக மாற்றியமைப்பது எனக் குறித்த மனுவிலே குறிப்பிட்டிருந்தார். இந்த நிலை அல்லது இதனையும் விட மோசமான நிலைதான் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னும் தொடர்கிறது. தமிழின அழிப்பையும், தமிழர்களுக்கான உரிமை மறுப்பையும் தொடரும் சிங்கள தேசம், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கப்போவதில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

இந்த நிலையிலேயே, சிறீலங்காவின் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது. ஒற்றையாட்சியை மையப்படுத்திய 1972 அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, தமிழர்களுடைய சுதந்திரமும் இறைமையும் நெருக்கடிக்குள்ளானதால், அரசியலமைப்பு உருவாக்கத்திலிருந்து தமிழ்த் தலைவர்கள் வெளிநடப்புச் செய்தார்கள். மக்கள் நலனை மையப்படுத்திய கொள்கையின் அடிப்படையிலே தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்கள். அது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரசவத்திற்கு வழியமைத்தது.

அமைதிவழியில் போராடியவர்களால் சாதிக்க முடியாமல் போனாலும் ஒரு வழித்தடத்தை உருவாக்கினார்கள். வெற்றிபெற முடியாவிட்டாலும் நாற்பது வருடங்களாக பிரவகிக்கக்கூடிய சுதந்திர சுடரை பற்றவைத்து விட்டுச் சென்றார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு செயல் வடிவம் கொடுக்க ஆயுதரீதியில் போராடியவர்களோ, தாம் வரிந்து கொண்ட இலட்சியத்திற்காக வாழ்ந்தார்கள். ஒரு வரலாற்றை எழுதிவிட்டு, தமது வாழ்வை அர்ப்பணித்தார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலுப்படுத்தும் சிதைக்க கடினமான சித்தாந்தத்தை விதைத்து விட்டு வீழ்ந்தார்கள்.

“வட்டுக்கோட்டைத் தீர்மானம்” நாற்பதாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள சமகாலத்திலேயே, சிறீலங்காவின் புதிய அரசியலமைப்பு உருவாக்கமும் இடம்பெற்று வருகிறது. இனக்குழும மோதுகை தோற்றம்பெற காரணமாக இருந்த எந்தப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு இதுவரை காணப்படவில்லை. அல்லது இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்ற இதயசுத்தியைக் கூட சிங்கள தேசம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. மாறாக, பன்னெடுங்காலமாக தொடரும் தமிழின அழிப்பு செயற்திட்டங்களை நாசுக்கான முறையில் நகர்த்திக்கொண்டு போகிறது. சிங்கள தேசம் நீதியை, நியாயமான அரசியல் தீர்வை 2016ல் மட்டுமல்ல இன்னும் நாற்பது வருடங்களிலும் தமிழர் தேசத்திற்க்கு வழங்கப் போவதில்லை என்பதை மாறுபடாத அவர்களின் நோக்கமும் புதுவடிவமெடுத்துவரும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இதேவேளை, வட்டுக்கோட்டைத் தீர்மானம் செயல்வடிவம் எடுத்து வெற்றிபெறுவதற்கான உள்ளக, வெளியக சூழல்கள் தற்போது இல்லாமல் விட்டாலும், எப்போதும் இல்லையென்று கூறமுடியாது. அத்துடன், அதற்கான தேவை முன்னரைவிடவும் அதிகரித்து காணப்படுகிறது.

மாற்றங்களை உண்டுபண்ணுபவர்களாக நாங்கள் மாறாத வரை, எங்களுக்கான மாற்றங்கள் உருவாகப்போவதில்லை. ஆகவே, மாற்றங்களுக்கான மாற்றங்கள் எங்கள் ஒவ்வொருவருடைய மனநிலையிலிருந்தும், செயற்பாட்டிலிருந்தும் ஊற்றெடுக்கட்டும்.

ஏனெனில், நாங்கள் உருவாக்கும் மாற்றங்களே எமக்கான காலங்களை உருவாக்கும். அத்தகைய காலங்களாலேயே, எமது மக்களுக்கான வாழ்வையும், அவர்களுக்கான எதிர்காலத்தையும் நிர்ணயிக்க முடியும்.

May 9, 2016

தமிழர்களுக்கான படிப்பினை: 101 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் ஆர்மேனியா

Filed under: Uncategorized — Nirmanusan @ 2:00 pm

ஆர்மேனிய இனஅழிப்பின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த ஏப்ரல் 24ம் திகதி ஆர்மேனியா தொடக்கம் உலகின் பல்வேறு பாகங்களிலும் உணர்வுபூர்வமாகவும் எழுச்சிபூர்வமாகவும் நினைவுகூரப்பட்டது. ஆர்மேனியாவுக்கு வெளியே இடம்பெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனியர்களுடன் ஆர்மேனியர்கள் அல்லாதவர்களும் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக கலந்துகொண்டனர்.

முதலாவது உலகப் போர் ஆரம்பிக்கும் போது இரண்டு மில்லியனாக இருந்த ஆர்மேனிய கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டுவருடங்களில் அரை மில்லியனாகியது. அதாவது, ஒட்டொமன் பேரரசால் (இன்றைய துருக்கி) ஒன்றரை மில்லியன் ஆர்மேனிய கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டொமன் பேரரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 250 ஆர்மேனிய அறிவியலாளர்கள் 24 ஏப்ரல் 1915ல் கொன்ஸ்ரான்ரிநோபிளில் (Constantinople) வைத்து படுகொலை செய்யப்பட்டமை ஆர்மேனிய இனஅழிப்பின் ஆரம்பமாக கருதப்படுகிறது. இதன் காரணமாகவே ஏப்ரல் 24ம் திகதியை ஆர்மேனியர்கள் ஆர்மேனிய இனஅழிப்பு நாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

இஸ்லாம் மதத்தை முன்னிலைப்படுத்தி பரவலடைந்த ஒட்டொமன் பேரரசு, தனது எதிரி நாடான ரஸ்யாவுக்கும் ஆர்மேனியர்களுக்கும் இடையில் நிலவிய உறவு தமது பலத்தை உறுதிப்படுத்தும் விரிவாக்கத்துக்கு இடையூறாக அமையும் என கருதியதாலேயே, ஆர்மேனிய இனஅழிப்பை மூர்க்கத்தனமாக மேற்கொண்டதாக கணிசமான வரலாற்றியலாளர்கள் கூறிவருகின்றனர்.

2

ஆர்மேனியர்கள் மீதான இனஅழிப்பை ஒட்டொமன் பேரரசு பல்வேறு கட்டங்களாக முன்னெடுத்திருந்தது. படுகொலைகள், பட்டினியால் சாகடித்தல், கட்டாய இடம்பெயர்வு தொடக்கம் ஆர்மேனிய சிறுவர்களை பலவந்தமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது வரை வெவ்வேறு வடிவங்களில் இனஅழிப்பை முன்னெடுத்திருந்தது. ஆர்மேனியர்களின் பண்பாடு, மொழி, மதம், அடையாளம் போன்றவற்றை நிர்மூலமாக்குலே இதன் நோக்கமாகும். ஏனெனில், ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் தனித்து குறித்த இனத்தை பகுதியாகவோ முழுமையாகவோ அழிப்பதனூடாக அதனை முழுமையாக அழிக்க முடியாது. மாறாக, குறித்த இனத்தின் மொழி, பண்பாடு, சமூககட்டமைப்பு, பொருளாதாரம், அடையாளம் மற்றும் குறித்த இனக்குழுமத்தினதோ மதக்குழுமத்தினதோ சித்தாந்தம் போன்றவற்றை உடனடியாகவோ படிப்படியாகவோ அழிப்பதனூடாக இனஅழிப்பு முழுமைபெறும். இதன் காரணமாகவே இனஅழிப்பு என்பதை நிரூபிப்பதில், செயற்பாட்டின் நோக்கம் (Intention) முக்கியமானதாகும். ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இன்றி பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டால் அதனை இனஅழிப்பென்று நிரூபிக்க முடியாது. ஆனால், ஒரு இனத்தினதோ அல்லது மதக்குழுமத்தினதோ அடையாளத்தை அழிக்கும் நோக்கோடு, குறித்த இனத்தினரை கட்டாயப்படுத்தி மதம்மாற்றினால் அதனை இனஅழிப்பென வாதிடமுடியும் என்பதன் எடுத்துகாட்டாக ஆர்மேனியர்களுக்கு எதிரான இனஅழிப்பு திகழ்கிறது.

ஆர்மேனியர்களின் 101 வருடகால நீதிக்கான போராட்டத்தில் ஆர்மேனிய இனஅழிப்பை சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என்பது முதன்மையாகவுள்ளது.

ஆர்மேனிய இனஅழிப்பை அமெரிக்கா வெள்ளை மாளிகை பிரதிநிதிகளும், செனட்டும் தனித்தனியாக ஏற்று அங்கீகரித்துள்ளன. அத்துடன், அமெரிக்காவின் 44 மாநிலங்கள் ஆர்மேனிய இனஅழிப்பை ஏற்று அங்கீகரித்துள்ளன. இருப்பினும், அமெரிக்கா ஒரு நாடாக ஆர்மேனிய இனஅழிப்பை உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரிக்கவில்லை. 2008ம் ஆண்டு சனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது ஆர்மேனிய இனஅழிப்பை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரிப்பதற்காக பணியாற்றுவேன் என உறுதிமொழி வழங்கிய பரக் ஓபாமா அவர்கள், குறித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்ற குற்றாச்சாட்டு ஆர்மேனியர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இனஅழிப்பு (Genocide) என்ற சொற்பிரயோகத்தை தவிர்த்துவரும் பரக் ஓபாமா அவர்கள், அதற்குப் பிரதியீடாக Meds Yeghern என்ற ஆர்மேனிய சொற்பிரயோகத்தை பாவித்தமையையும் விமர்சித்துள்ளனர். Genocide என்ற சொற்பிரயோகம் 1944 லேயே உருவாக்கம் பெற்றது. ஆனால், ஆர்மேனிய இனஅழிப்பு ஆரம்பித்தது 1915ல். அக்காலப் பகுதியில் பாரிய குற்றம் (Meds Yeghern) என்றே இனஅழிப்பை ஆர்மேனியர்கள் வர்ணித்தார்கள். ஆயினும், 1965லிருந்து ஆர்மேனியர்கள் மீதான படுகொலை இனஅழிப்பு என ஏற்று அங்கீகரிக்கப்படத் தொடங்கியது. அதற்கு ஆர்மேனிய புலம்பெயர் சமூகம் மேற்கொண்ட பரப்புரைகளும் இராசதந்திர நடவடிக்கைகளும் வித்திட்டது. அதன் ஒரு அங்கமாக, பரக் ஓபாமா அவர்களும் 19 சனவரி 2008 ஆர்மேனியர்களின் இனஅழிப்பை அங்கீகரிப்பேன் என உறுதிமொழி வழங்கினாலும் அதனை காப்பாற்றவில்லை. இது, இனஅழிப்பு என்ற சொற்பிரயோகம் மட்டுமல்ல, சர்வதேச உறவில் குறித்த சொற்பிரயோகங்களை நாடுகளும் முக்கிய தலைவர்களும் தவிர்த்து வருவதற்கான பின்புலத்தையும் புடம்போட்டு காட்டுகிறது.

இதேவேளை, ஆர்மேனிய இனஅழிப்பை இதுவரை 20 நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்று அங்கீகரித்துள்ளன. அத்துடன், ஐரோப்பிய நாடாளுமன்றம், தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டது இனஅழிப்பு என தீர்ப்பு வழங்கிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent Peoples’ Tribunal) உட்பட உலகின் மிக முக்கியமான அமைப்புகள், சபைகள், பேரவைகளும் ஆர்மேனிய இனஅழிப்பை ஏற்று அங்கீகரித்துள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதலோ ஆர்மேனிய இனஅழிப்பை மேற்குறித்த நாடுகளோ சபைகளோ ஏற்று அங்கீகரிக்வில்லை. மாறாக, ஆர்மேனிய மக்களின், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனிய மக்களின் இடைவிடாத, சோர்ந்து போகாத, பரம்பரை பரம்பரையான, விலைபோகதா போராட்டமே இன்றும் ஆர்மேனிய இனஅழிப்பை சர்வதேச அரங்கில் பேசுபொருளாக வைத்திருப்பதோடு, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரசியா உட்பட 20 நாடுகளையும் உலகின் முக்கியமான அமைப்புகளையும் எற்று அங்கீகரிக்க வைத்திருக்கிறது.

நடாத்தப்பட்ட இனஅழிப்பை ஏற்று அங்கீகரித்தல் அல்லது நீதிக்கான தீர்ப்பு வழங்குதல் என்பது சர்வதேச சமூகத்தாலோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தாலோ விரைவாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுவது உடனடி சாத்தியமான விடயமல்ல. மாறாக இது பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து தோற்றம் பெற்று, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள், அறிவியலாளர்கள், கல்விமான்கள் போன்ற தரப்புகள் ஊடாக விரிவடைந்து பரிணமிக்கின்ற ஒரு விடயம்.

பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நடந்த அநீதியை, இனஅழிப்பை முன்னிறுத்தியதால் சர்வதேச அங்கீகாரம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரித்த பிற்பாடே தமக்கு இனஅழிப்பு இடம்பெற்றிருக்கிறது என மக்கள் கூறியதாக வரலாறில்லை. இதனைத்தான் உலகில் முதன்முதலாக இனஅழிப்பை சந்தித்த ஆர்மேனியர்களின் வரலாறு, இனஅழிப்புக்கு முகம்கொடுத்த, முகம்கொடுத்து வருகிற தரப்புகளுக்கும் நீதிக்காக போராடும் தரப்புகளுக்ளும் எடுத்துச் சொல்கிறது.

ஒட்டொமன் இராச்சியத்தின் தலைநகரமாக இருந்த கொன்ஸ்ரான்ரிநோபிள் துருக்கியின் இன்றைய முக்கிய நகரங்களில் ஒன்றான ஸ்ரான்வுள் (Istanbul) ஆக திகழ்கிறது. துருக்கி இன்றும் ஒரு பலமான நாடு. அமெரிக்காவோடு முக்கிய உறவைக் கொண்டுள்ள துருக்கி, நேற்ரோவில் (NATO) பலம்மிக்க ஒரு நாடாக திகழ்கின்றது. இத்தகைய துருக்கிக்கு எதிராக 101 வருடங்கள் தாண்டியும் சந்ததி சந்ததியாக ஆர்மேனியர்களின் நீதிக்கான போராட்டம் தொடர்கிறது. கடந்த 24ம் திகதி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துருக்கி தூதுவராலயத்திற்கு முன் இடம்பெற்ற நினைவுகூரல் மற்றும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.

download

101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இனஅழிப்பை மறுத்து வரும் துருக்கி, படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக குறைத்து காட்டுவதுடன், குறித்த மரணங்களுக்கு வேறு கற்பிதங்களைக் கூறிவருகிறது. ஆர்மேனியாவுக்கு அடுத்தபடியாக ஆர்மேனியர்கள் அதிகமாக வாழும் நாடு அமெரிக்கா. ஆதலாலேயே, இனஅழிப்புக்கு நீதி கேட்டும் ஆர்மேனியர்களின் போராட்டம் அமெரிக்காவில் அதிக கவனத்தை ஈர்ந்திருக்கிறது. இருப்பினும், இதனை முறியடிக்கும் நகர்வுகளில் துருக்கி தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. ஆர்மேனியர்களின் 101 ஆவது ஆண்டு நினைவுகூரலை அமெரிக்காவில் நீர்த்துப் போகச் செய்யும் முகமாக, துருக்கி அமெரிக்காவின் முக்கியமான நகரங்களிலும், முக்கியமான அமெரிக்க நாளேடுகளிலும் பெரும் பணச்செலவில் விளம்பரங்களை மேற்கொண்டது. ஆயினும், ஆர்மேனியர்கள் மனம்தளரவில்லை. அவர்களின் எதிர்ப்பையடுத்து கணிசமான நகரங்களில் குறித்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.

தாம் உலகின் பலம்மிக்க நாடொன்றுடன் போராடுகிறோம். இது சவால் நிறைந்த முனைப்புகள் என தெரிந்திருந்தும் ஆர்மேனியர்களின் போராடும் உணர்வு குறைந்து போகவில்லை. துருக்கியோடு ஒப்பிடும் போது ஆர்மேனியர்கள் மிகப் பலவீனமான நிலையிலிருந்தாலும், ஆர்மேனியர்களின் பலம் என்பது அவர்களின் மனஉறுதியிலிருந்தும் போராட்டத்தின் தொடர்ச்சியிலிருந்தும் தோற்றம் பெற்று 101 வருடங்களுக்குப் பிறகும் உயிர்ப்போடு திகழ்கிறது. ஆர்மேனியர்களுக்கென்று ஒரு நாடும், அதனை ஆள்வதற்கு அரசும் உண்டு. ஆயினும், அந்த நாட்டின் அமைவிடமும், நாட்டில் பலவீனமான முறைமைகளும் ஆர்மேனிய அரசால் இனஅழிப்புக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும், நீதி கோரி போராடும் ஆர்மேனிய புலம்பெயர்ந்து வாழும் சமூகத்துக்கு ஆதரவாக ஆர்மேனிய அரசு இருந்து வருகிறது.

நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்; தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கைவகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான அக, புறச்சூழல்களையும் உருவாக்கும். மாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வடைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.

ஆகவே, எமக்காக நாமே போராட வேண்டும். எமக்கு நடந்த அநீதியை, இனஅழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று என்ற மனப்பாங்கோடு ஆர்மேனியர்களின் போராட்டம் 102 ஆவது ஆண்டில் தடம் பதித்துள்ளது.

தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக, சிங்கள தேசத்தால் மிக நுட்பமாக முன்னெடுக்கப்படும் தமிழர்களின் அடையாள அழிப்புக்கும் சித்தாந்த சிதைப்புக்கும் மத்தியில், தமிழர்களின் இனஅழிப்பு மறுக்கப்பட்டு வருகின்ற சூழலில், தமிழ் இனஅழிப்பு என்ற சொற்பிரயோகத்தை வெளிச்சக்கதிகள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவும், தமிழ் அரசியல்வாதிகள் சிலரும் தவிர்த்துவருகின்ற பின்னணியில், உத்தியோகபூர்வ கூட்டுநினைவுகூரல் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற பின்புலத்தில், முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா ஆட்சிபீடம் நடாத்திய இனஅழிப்பின் ஏழாவது ஆண்டை நினைவுகூர தயாராகும் தமிழர் தேசம் ஆர்மேனியர்கள் தரும் படிப்பினைகளை கவனத்திற்கொண்டு தனது நீதிக்கான போராட்டத்தை பலப்படுத்துமா?

January 10, 2016

ரோனி பிளேயரின் வகிபாகமும் தமிழருக்கு முன்னுள்ள சவாலும்

Filed under: Uncategorized — Nirmanusan @ 2:32 pm

பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் ரோனி பிளேயர் அவர்கள் கடந்த ஐந்து மாதத்திற்குள் சிறீலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். தனது முதலாவது பயணத்தின் போது சிறீலங்கா சனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஒகஸ்ட் 24ம் திகதி சந்தித்த ரோனி பிளேயர், தனது இரண்டாவது பயணத்தின் போது இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களை கடந்த சனவரி 3ம் திகதி சந்தித்துள்ளார்.

TM

ஒளிப்பட உதவி: Newsfirst

சர்வதேச ரீதியில் சிறீலங்கா தொடர்பாக நிலவும் தவறான எண்ணங்களை களைவதற்கு தான் உதவத் தயார் என மைத்திரிபாலவுடனான சந்திப்பில் ரோனி பிளேயர் தெரிவித்திருந்தார். போர்க்குற்றச் சாட்டும், பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களும் இன்றுவரை சிறீலங்காவை சர்வதேச கவனத்திற்குள் வைத்துள்ளன. அவ்வாறாயின், இவற்றை ரோனி பிளேயர் சர்வதேச ரீதியில் நிலவும் தவறான எண்ணங்கள் என கருதுகிறாரா? அத்துடன், சிறீலங்காவை போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து மீட்கப்போகிறாரா என்ற கேள்விகள் இத்தருணத்தில் எழுவது தவிர்க்கப்பட முடியாதது. இதேவேளை, ரோனி பிளேயரை சிறீலங்காவுக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களும் போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து சிறீலங்காவை காப்பாற்றும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. மைத்திரிபாலவுடனான சந்திப்புக்கு அடுத்த நாள், ரோனி பிளேயர் காலஞ்சென்ற லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவுப் பேருரையை ஆற்றியிருந்தார். இந்த பத்தி எழுதப்படும் பொழுது(06/01/16), பொருளாதார மாநாட்டில் பங்கெடுப்பதற்காக இரண்டாவது தடவையாக சிறீலங்கா வந்தடைந்துள்ள ரோனி பிளேயர் சம்பந்தனை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, நிலங்கள் மீளக் கையளிப்பு மற்றும் மீள்குடியேற்றம் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பணியக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரோனி பிளேயர் தற்போது பிரித்தானிய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக, தனது தனிப்பட்ட அமைப்பான ரோனி பிளேயர் ப்பெய்த் நிறுவகத்தின் (Tony Blair Faith Foundation) சார்பாகவே சிறீலங்காவுடனான உறவைப் பேணுகிறார். அவரது முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகளால் ரொனி பிளேயர் சர்வதேச ரீதியில் சர்ச்சைகளுக்குள்ளானவர்.

சம்பந்தனுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய ரோனி பிளேயர், கசகஸ்தான் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட பொதுமக்கள் படுகொலை ஒன்றினை எவ்வாறு கையாளலாம் என்பது தொடர்பாக கசகஸ்தான் அரசாங்கத்துக்கு பொதுசன உறவு தொடர்பாக ஆலோசனை வழங்கியவர். இதனால், இவர் கடும் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருந்தார்.

அத்துடன், 2007ல் அமெரிக்கா, ரஸ்யா, ஐ.நா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் மத்திய கிழக்குக்கான தூதராக நியமிக்கப்பட்ட ரோனி பிளேயர், 2015ல் அப்பதவியை துறப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். இஸ்ரேலுக்கு சார்பாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டும், முகமட் அபாசின் போட்டியாளரும் பலஸ்தீனத்தின் எதிர்கால தலைவராக வருவதற்கு விருப்பம் கொண்டு புகலிடத்தில் இருந்து செயற்பட்டு வருபவருமான மொகமட் டஹ்லனுடனான ரோனி பிளேயரின தொடர்பும், ரோனி பிளேயரின் நடுநிலைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. இதனால் 2015 ல் ரோனி பிளேயர் தனது பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

1999 மார்ச் 24 தொடக்கம் யூன் 10ம் திகதி வரை சேர்பியா மீது மேற்கொள்ளப்பட்ட நேட்ரோ (NATO) விமானத் தாக்குதல்களின் பின்னணியில் ரோனி பிளேயர் முக்கிய பங்குவகித்தார். நேட்ரோ குண்டுத் தாக்குதல்களால் சேர்பியாவின் உட்கட்டமைப்பு வசதிகள் சின்னாபின்னமானதுடன் சேர்பியா பேரழிவைச் சந்தித்தது. இதன் விளைவாக, கொசோவோவில் சேர்பியா படைகள் மேற்கொண்டுவந்த இராணுவச் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதுடன் ஐ.நா அமைதி காக்கும் படை கொசோவோவில் நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன், கொசோவோ சுதந்திர தேசமாக மலர்வதற்கு அடித்தளமிடப்பட்டது.

சேர்பியாவின் இன்றைய பிரதமராக திகழும் அலெச்சன்டர் வுசிக் (Aleksandar Vucic) அவர்கள் நேட்டோ குண்டுத் தாக்குதலின் போது மிலோசெவிக் அரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சராக பணியாற்றியவர். 2005ல் இவரையும் ஆசிரியராக கொண்டு வெளியான English Gay Fart Tony Blair என்ற நூல் ரோனிய பிளேயரை கடுமையாக விமர்சித்தது.

சேர்பியா மீதான குண்டு தாக்குதல் இடம்பெற்று 16 ஆண்டுகளுக்குப் பிற்பாடு, சேர்பிய பிரதமர் அலெச்சன்டர் வுசிக்குக்கான ஆலோசகராக ரோனி பிளேயர் செயற்படுகிறார் என்று பெப்ரவரி 2015ல் உறுதிப்படுத்தப்பட்டது. சேர்பிய பிரதமருக்கான ஆலோசனையை தனது இன்னொரு அமைப்பான Tony Blair Associates ஊடாக ரோனி பிளேயர் மேற்கொள்கிறார். சுகாதாரம், சட்டத்தின் ஆட்சி, கல்வி, பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை தொடர்பாகவே சேர்பிய பிரதமருக்கு ரோனி பிளேயர் ஆலோசனை வழங்குவார் என்று Tony Blair Associates ஐ மேற்கோள்காட்டி இலண்டனை தளமாகக் கொண்ட ‘த ரெலிகிறாப்’ நாளிதழ் தகவல் வெளியிட்டது.

ஆயினும், காலப் போக்கில் சேர்பியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் கிடைப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் துராநோக்குடன் மேற்கொள்ளப்படுவதாக சேர்பியா விவகாரங்களில் நிபுணத்துவமுடையவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோசோவோ போரின் போது அல்பானியாவுக்கு ஆதரவாக செயற்பட்ட ரோனி பிளேயர், 2013ல் அல்பானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு உடன்பட்டிருந்தார். இதேவேளை, கொசோவோவின் சுதந்திரத்துக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவரான ரோனி பிளேயரே காலப் போக்கில் கோசோவோவின் சுதந்திரம் இழக்கப்படுவதற்கு காரணமாக இருக்கப் போகிறார் என்ற செய்திகளும் சேர்பியாவில் உலாவுகிறது.

பூகோள அரசியல் போட்டியே கோசோவோ ஒரு சுதந்திர நாடாக உருவாகுவதற்கு உதவியது. சக்தி மிக்க நாடுகளின் நலன்கள் பூர்த்தியடைந்ததை அடுத்து, கோசோவோவின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால், கோசோவோ தோல்வியடைந்த நாட்டின் நிலைக்கு மாறிவிட்டது. இதன் விளைவாக, கோசோவே பிரசைகள் கோசோவோவை விட்டு வெளியேறி மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேற ஆர்வம் காட்டுகிறார்கள். ஆயினும், சேர்பியா கடவுச் சீட்டுடன் ஒப்பிடுமிடத்து, கொசோவோ கடவுச்சீட்டுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதோ அல்லது தற்காலிகமாக வாழ்வதோ இலகுவான விடயமல்ல.

கோசோவோ பிரசைகளின் அவாவை அறிந்த கொண்ட சேர்பியா, கோசோவோ பிரசைகளுக்கு சேர்பியா கடவுச்சீட்டு வழங்கத் தொடங்கியது. மேற்கு ஐரோப்பாவில் வாழ்வதை நோக்காக கொண்ட கோசோவோ பிரசைகள் தயக்கமின்றி சேர்பியா கடவுச்சீட்டுக்களைப் பெற்று வருகின்றனர். இதனூடாக சேர்பிய கடவுச்சீட்டு பெறும் கோசோவோ பிரசைகள் சட்டரீதியாக சேர்பிய பிரசைகளாக கருதப்படுவார்கள். அதேவேளை, 2008 பெப்ரவரியில் சுதந்திரமடைந்த கோசோவோவை சேர்பியா ஒரு சுதந்திர நாடாக இன்று வரை அங்கீகரிக்கவில்லை. மாறாக, தனது நாட்டின் ஒரு பகுதியாகவே இன்றுவரை கருதுகிறது. கொசோவோ பிரசைகள் சேர்பியா கடவுச்சீட்டு பெறுவதை ஊக்குவிக்கும் சேர்பியா, காலநீட்சியில் கோசோவோவில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடாத்த திட்டமிட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பின் ஊடாக கோசோவோவில் அதிக பெரும்பான்மையாக வசிப்பவர்கள் சேர்பிய பிரசைகள் என்பதை வெளிப்படுத்துவதோடு, கோசோவோ தனிநாடாக தொடர்வதற்கான தகுதியை இழந்துள்ளது என நிரூபிக்க முயல்கிறது.

இதேவேளை, பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் அங்கு வாழும் இனங்களுக்கிடையில் பதற்றம் நீடிக்கிறது. சக்திமிக்க நாடுகளின் நலன்களுக்காக, அவசர அவசரமாக ஒரு அரசியல் தீர்வுத் திட்டம் திணிக்கப்பட்டதன் தாக்கமே இது. காயத்தை குணமாக்கும் நோக்கோடு செய்யப்படாமல், மறைத்து கட்டும் நோக்கோடு செய்யப்பட்டதால் நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பங்கள் பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் குறைந்தன. விளைவு, மோதுகைகளுக்கான தீர்வான டேற்றன் உடன்படிக்கை(Dayton Agreement) கைச்சாத்தாகி சுமார் இரு தசாப்தங்கள் ஆகியுள்ள நிலையிலும் முரண்பாடுகள் தொடர்கிறது. அதுமட்டுமன்றி, பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் வசிக்கும் சேர்பியர்கள், சேர்பியாவுடன் இணைவதற்கு முயன்று வருகிறார்கள். இதனை மறைமுகமாக ஊக்குவிக்கும் சேர்பியா, பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் வசிக்கும் சேர்பியர்களின் திட்டத்தை கணிசமான காலத்துக்கு பிற்போடுமாறு கோரியுள்ளது.

ஏனெனில், தற்போது கோசோவோவில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடாத்துவதும், பொஸ்னியா மற்றும் ஹேர்சிகோவினாவில் சேர்பியர்கள் வசிக்கும் பகுதியை சேர்பியாவோடு இணைப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்பியாவுக்கான அங்கத்துவம் கிடைப்பதை பாதிக்கக்கூடும். ஆதலால்தான், நீண்டகால உத்திகளோடும், தந்திரோபாயங்களுடனும் சேர்பியா தனது நகர்வுகளை முன்னெடுக்கிறது. இவற்றிற்கான ஆலோசகராக ரோனி பிளேயர் திகழ்கிறார் என சேர்பியா தொடர்பான நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

TV

ஒளிப்பட உதவி: Newsfirst

சுமார் பதினேழு வருடங்கள் கழிந்த நிலையில், கீரியும் பாம்பும் போல் இருந்த ரோனி பிளேயரும் அன்று போர்க்குற்றவாளி எனக் கூறப்பட்டவும் சேர்பியாவின் இன்றைய பிரதமராக திகழுபவருமான அலெச்சன்டர் வுசிக்கும் நல்லுறவை கட்டியெழுப்பியுள்ளனர். ஏதோ ஒரு வகையில் அன்று சேர்பியா அழிவடைவதற்கு காரணமாகவிருந்த ரோனிய பிளேயர் இன்று சேர்பியா வல்லமையோடு மீண்டும் நிமிர துணைபுரிகிறார். அதேவேளை, அன்று தனது பங்குடன் விடுதலையடைந்த கோசோவோவின் சுதந்திரம், எதிர்காலத்தில் இழக்கப்படும் ஆபத்தை நோக்கி செல்வதற்கு காரணமாக மாறிவருகிறார்.

இது அரசியலில், நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனுமில்லை. மாறாக, நலன் மட்டுமே நிரந்தரமானது என்பதை புலப்படுத்துவதோடு, நடைமுறைச் சாத்தியம், யதார்த்தம் போன்றவை நிலையற்றவை என்பதை நிரூபித்துள்ளது. ஆதலால், இது தான் நடைமுறைச் சாத்தியம், யதார்த்தம் எனக் கூறி கிடைப்பதை பெற்றுக்கொள்வதையும் தருவதை வாங்கிக் கொள்வதையும் உடைய மனப்பாங்கை விடுத்து, மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் பொறிமுறைகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்து செயற்பட வேண்டும். அதுவே, ஒரு தேசத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நிர்ணயிக்கும். அந்த வகையில், ரோனி பிளேயரின் பின்புலத்தையும், சிறீலங்கா தொடர்பான அவரது நிகழ்ச்சி நிரலையும் புரிந்து, தமிழர் தேசத்தின் நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படுமா தமிழர் தரப்பு?

Next Page »

Blog at WordPress.com.

%d bloggers like this: